Published : 12 Apr 2023 07:17 PM
Last Updated : 12 Apr 2023 07:17 PM

மாதவன், சித்தார்த், நயன்தாரா இணையும் ‘டெஸ்ட்’ - மோஷன் போஸ்டர் வெளியீடு

நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தை YNOT ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

'தமிழ்ப் படம்', 'விக்ரம் வேதா', 'இறுதி சுற்று' மற்றும் தேசிய விருது பெற்ற 'மண்டேலா' உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரான YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் இப்படத்தை இயக்குகிறார். தனது 23வது தயாரிப்பான 'டெஸ்ட்' மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல நட்சத்திரங்களான மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படம் குறித்து மாதவன் கூறுகையில், “சஷி இயக்குநராக அறிமுகமாவதில் மிகுந்த மகிழ்ச்சி. கட்டிட வடிவமைப்பு கலைஞராக இருந்து வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பாளராக மாறிய அவர், இப்போது இயக்குநராகவும் அவதாரம் எடுப்பதை பார்ப்பது உற்சாகம் அளிக்கிறது. ‘இறுதி சுற்று’ மற்றும் ‘விக்ரம் வேதா’வுக்குப் பிறகு YNOT உடனான எனது மூன்றாவது படமான 'டெஸ்ட்' திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

நயன்தாரா கூறுகையில், “சஷிகாந்த் தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் சிறந்த திறமைகள், தரமான கதைகள் உள்ளிட்டவற்றுக்கு சான்றாக திகழ்கின்றன. சஷிகாந்தின் அசாத்தியமான திறமையை பற்றி பல சகாக்களிடமிருந்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய தனித்துவமான பார்வையும், கதை சொல்லும் திறமையும் இந்தப் படத்தை அமோக வெற்றியடைய செய்யும் என்பதில் சந்தேகமில்லை. YNOT தயாரிப்பில் சஷிகாந்தின் இயக்கத்தில் உருவாகும் முதல் படமான 'டெஸ்ட்'டில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், சிறப்பான கதாபாத்திரத்தில் இப்படத்தில நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்

எஸ்.சஷிகாந்த் கூறுகையில், “ஒரு கட்டிடக் கலைஞராக இருந்து தயாரிப்பாளராக மாறியதால், கதை சொல்லும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் நான் எப்போதும் ஈர்க்கப்பட்டேன். இந்தத் துறையில் உள்ள திறமையான திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றும் அதிர்ஷ்டம் பல ஆண்டுகளாக எனக்கு கிடைத்து வருகிறது. அவர்களது அர்ப்பணிப்பு நிலையான உத்வேகமாக எனக்கு இருந்து வருகிறது. இப்போது ஒரு இயக்குநராக எனது புதிய அத்தியாயத்தை தொடங்கும் போது, எனது கண்ணோட்டத்தை திரையில் கொண்டு வரவும், பார்வையாளர்களை சென்றடையும் கதைகளை கூறவும் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

இயக்குநராக நான் அறிமுகமாகும் படத்தில் அசாதாரண திறமை கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உள்ளனர். அவர்களின் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்," என்றார். சென்னை மற்றும் பெங்களூரில் ஜூலை 2023 வரை படப்பிடிப்பு நடைபெறும். 2024 கோடை காலத்தில் உலகளவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும். போஸ்டர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x