

யாரும் அவசரப்பட்டு உணர்ச்சிகளைக் கொட்டிவிட வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என்று 'விழித்திரு' சர்ச்சை குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்திருக்கிறார்.
'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர், தன்ஷிகாவை கடுமையாக சாடினார். இதனால் மேடையிலேயே தன்ஷிகா அழத் தொடங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது.
இந்த விவகாரத்தில், 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பு மேடையிலிருந்த இயக்குநர் வெங்கட்பிரபு, கிருஷ்ணா, விதார்த் உள்ளிட்ட படக்குழுவினரையும் சமூக வலைதளத்தில் கடுமையாக சாடத் தொடங்கினார்கள்.
இது குறித்து வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வயதில் பெரியவர்களுக்கு எப்போதும் மரியாதை தர வேண்டும் என்று தான் என்னை வளர்த்திருக்கிறார்கள். டி.ஆர் அவரது எண்ணங்களை 'விழித்திரு' விழாவில் பேசியிருந்தார். முதலில் நாங்கள் கிண்டல் என நினைத்த ஒன்று போகப் போக தீவிரமடைந்தது. எனக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.
தன்ஷிகா துறைக்குப் புதியவர். பொது மேடையில் எப்படி பேச வேண்டும் என்ற அனுபவமற்றவர். ஒழுங்காக வழிநடத்துவது எங்களைப் போன்ற துறையில் மூத்தவர்களின் பொறுப்பு என நினைக்கிறேன்.
வழிகாட்டுதலே கடவுளின் செயலும். யாரும் அவசரப்பட்டு உணர்ச்சிகளைக் கொட்டிவிட வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். காயப்படுத்துவதால் நமக்கு எதுவும் லாபமில்லை. இந்தக் கருத்தை நான் எப்போதும் போல மரியாதையுடன் வெளிப்படுத்துகிறேன்.
இவ்வாறு வெங்கட்பிரபு தெரிவித்திருக்கிறார்.