

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தில் அஜித் - த்ரிஷா இருவரும் கணவன், மனைவியாக நடித்து வருகிறார்கள்.
அஜித், அனுஷ்கா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை தயாரித்து வருகிறார் ஏ.எம்.ரத்னம்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அஜித், த்ரிஷா இருவரும் கணவன், மனைவியாக நடித்து வருகிறார்கள் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அச்செய்தியினை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
தற்போது அச்செய்தியினை உறுதிப்படுத்தி இருக்கிறார் தேவி அஜித். இப்படத்தில் இவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
தேவி அஜித் அளித்துள்ள பேட்டியில், "நீண்ட மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் வேடத்திற்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டேன். படக்குழுவிடம் இருந்து எனக்கு போன் வந்ததும் சந்தோஷமாக இருந்தது. இப்படத்தில் எனது முதல் காட்சியாக அஜித், த்ரிஷாவின் கல்யாண காட்சியில் நடித்தேன்." என்று கூறியிருக்கிறார்.
மலையாளத்தில் '5 சுந்தரிகள்' படத்திற்காக கேரள அரசு விருது வென்ற அனிகா என்ற குழந்தை இப்படத்தில் அஜித், த்ரிஷா இருவருக்கும் மகளாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்கள் கழித்து, 'காதல் கோட்டை' படத்தில் அஜித்திற்கு நண்பராக நடித்த 'தலைவாசல்' விஜய்யும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.