

தற்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை என்று 'துப்பறிவாளன்' படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் விஷால் தெரிவித்தார்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'துப்பறிவாளன்'. அரோல் குரலி இசையமைத்துள்ள இப்படத்தை விஷால் தயாரித்துள்ளார். நந்தகோபால் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார். 'துப்பறிவாளன்' படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழா முடிந்தவுடன் கமல் அரசியல் சர்ச்சை குறித்து விஷாலிடம் பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விஷால் பேசியதாவது:
தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்தியா சினிமாவுக்கே முன்னுதாரணமாக இருப்பவர் கமல் சார். அவருடைய கருத்துக்கள் சில சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள். சுதந்தரமாக கருத்துக்களை பதிவு செய்வது என்பது நமது நாட்டில் மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் இருக்கிறது.
கமல் சாரின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துகளைத் தவிர்த்திருக்கலாம். கமல் சாரின் கருத்துகளுக்கு அமைச்சர்கள் தங்களுடைய எதிர்கருத்துகளை பதிவு செய்துள்ளார்கள். இது ஒரு வார்த்தைப் போர்.
கமல் சாரிடம் பேசிய போது, இந்த விஷயத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்கிறார். எப்போதுமே கமல் சாருக்கு ஆதரவாக நிற்போம். அமைச்சருக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் சில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்.
கமல் சாருக்கு எவ்வித மிரட்டல் விடுத்தாலும், அதை தைரியமாக சந்திக்கக்கூடிய நபர் தான். எந்த ஒரு சூழலிலும் கமல் சார் பின்னால் இருப்போம்.
ரஜினி சார் மற்றும் கமல் சார் இருவருமே அரசியலுக்கு வருகிறோம் என்று அறிவிக்கட்டும். அதற்குப் பிறகு அதைப் பற்றிய எனது கருத்துகளைச் சொல்கிறேன். அதுவரைக்கும் நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு விஷால் பேசினார்.
நீங்கள் அரசியலில் நுழைவீர்களா என்ற கேள்விக்கு, "நல்ல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தற்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை" என்று பதிலளித்துள்ளார் விஷால்.