Published : 02 Apr 2023 08:28 AM
Last Updated : 02 Apr 2023 08:28 AM

விடுதலை: திரை விமர்சனம்

விடுதலை பட போஸ்டர்

அருமபுரி என்கிற மலையூரை மையமாக வைத்து, அங்கே கனிமவளச் சுரங்கம் தோண்ட ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறது அரசு. ஆனால், மலையை வாழ்விடமாகவும் அதையே வாழ்வாதாரமாகவும் கொண்டுள்ள எளிய மக்களின் பின்னால் நின்று ஆயுதம் தாங்கி அதை எதிர்க்கிறது ‘மக்கள் படை’ என்கிற போராளிக் குழு. அதைத் தலைமை தாங்கி வழி நடத்தும் பெருமாளை (விஜய்சேதுபதி) கைது செய்து, அவரது குழுவை கூண்டோடு அழிக்க, இரண்டு ஆயுதப் படை பிரிவு போலீஸார் அருமபுரியில் முகாமிடுகின்றனர்.

அந்த முகாமுக்கு வந்து ஜீப் ஓட்டுநராகப் பணி இணைகிறார் காவலர் குமரேசன் (சூரி). அருமபுரி மக்களுக்காக இரங்கும் அவர், அந்த ஊரின் பெண்ணான தமிழரசியின் மனதிலும் இடம் பிடிக்கிறார். இச்சமயத்தில் காவல் படைக்கும் - மக்கள் படைக்கும் இடையிலான மோதல் முற்றி, அது அப்பாவி மக்கள் மீது திணிக்கப்படும் சித்திரவதை முகாமாக மாறுகிறது. அதனால் பாதிக்கப்படும் குமரேசன், மக்கள் படை பெருமாளை கைது செய்வதன் மூலமே கிராமத்து மக்களைச் சித்திரவதைலிருந்து காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறார். அதற்காக ஓடும் ஓட்டத்தில் பெருமாளை அவர் சந்தித்தாரா, இல்லையா என்பது முதல் பாகத்தின் கதை.

முழுநீளத் திரைப்படம் ஒன்றுக்கு, ஒரு நாவலைத் தழுவி திரைக்கதை எழுதுவது எளிது. ஆனால், குறும்படமாக எடுத்துவிடக் கூடிய, ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்கிற சிறுகதையின் ஆன்மாவை மட்டும் எடுத்துக் கொண்டு, இரண்டு பாக சினிமாக்களுக்கான திரைக்கதையை எழுதி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.

கனிமவளச் சுரண்டலின் வழியாக ஆதாயம் அடைய நினைக்கும் அதிகார வர்க்கம், பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்டை ஆகியவற்றுக்கு எதிராக நிற்கும் மண்ணின் மக்களையும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போராளிக் குழுக்களையும் கையாளும் அரச வன்முறை என்பது, ரத்தமும் சதையுமான பெரும் கதைக் களம் என்பதை, சமரசம் ஏதுமற்ற திரைக்கதையின் வழியாகக் காட்டி, இரண்டாம் பாகத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டும் முன்னோட்டக் காட்சிகளுடன் படத்தை முடித்திருக்கிறார்.

அரசு, ஆளுங்கட்சி, எதிர்கட்சி, மக்கள், போராளிகள், போலீஸ் என ஒவ்வொரு தரப்பின் பக்கத்தையும் அப்படியே விரித்து வைக்கும் படம், எந்தச் சார்பையும் எடுக்காமல், யாரின் பக்கமும் சாயாமல் பயணிக்கிறது. ‘படத்தில் நிகழும் அனைத்து சம்பவங்களும் கதாபாத்திரங்களும் கற்பனையே’ என்று பொறுப்புத் துறப்பு அறிவிப்பு செய்தாலும், எந்த நிலைபாட்டையும் எடுக்காத திரைக்கதையின் இந்த அணுகுமுறை, பார்வையாளரை தமிழ்நாட்டின் சமூக வரலாற்றைத் தேட உந்தித் தள்ளுகிறது. குமரேசன் - பெருமாள் ஆகிய இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்களும் எத்தகைய சூழலில், கதையின் எந்தக் கட்டத்தில் சந்திக்கின்றன என்பதுதான் முதல் பாகத்தின் மிக முக்கிய ‘சினிமாடிக்’ முத்தாய்ப்பு.

பெயர் சூட்டப்படாத மலைபூவைப் போல, குமரேசன் - தமிழரசி இடையே மலரும் காதலை இவ்வளவு இயல்பாகச் சித்தரிக்க முடியுமா என்று மனதை சிலுசிலுக்க வைத்திருப்பது இன்னொரு ‘சினிமேடிக்’ தருணம். அதேநேரம், காவல் துறையின் மனித உரிமை மீறல்கள், அதன் அதிகார அடுக்கில் துறைக்குள் நிகழும் ஒடுக்குமுறை ஆகியவற்றைச் சித்தரித்த விதத்தில் தனது ‘விசாரணை’ படத்தை முந்திச் சென்றிருக்கிறார் வெற்றிமாறன்.

சாமானிய மக்களின் வாழ்விலிருந்து தூய நகைச்சுவையை எடுத்துப் பயன்படுத்தி தன்னை நிலை நிறுத்திக்கொண்ட சூரி, இதில் குமரேசனாக மட்டுமே வந்து கவர்கிறார். துரத்தல் காட்சி ஒன்றிலும் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பைக் கொடுத்திருக்கிறார். உயரதிகாரி சுனிலுக்கு காபி கொடுக்கும் அந்த ஒரு காட்சியில் சார்லி சாப்ளினை நினைவூட்டிவிடுகிறார். தமிழரசியாக பவானி ஸ்ரீ மனதில் பதிந்து போகிறார். சேத்தனும் கௌதம் மேனனும் பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்வதில் போட்டி போட்டிருக்கிறார்கள்

ரயில் பால குண்டு வெடிப்பு விபத்துக் காட்சி ஒன்று, இதற்கு முன் இவ்வளவு அழுத்தமாக படம்பிடிக்கப்பட்டதில்லை! அதில் தொடங்கி ஆயுதல் காவல் படை முகாம், மேற்குத் தொடர்ச்சி மலைக்காடு என ஊடுருவிச் சென்று நம்மை கதையின் களத்துக்குள் பிரவேசிக்க வைத்துவிடுகிறது வேல்ராஜின் கேமரா எண்பதுகளின் தொடக்கத்தில் நிகழும் கதைக்கு இளையராஜாவின் இசையும் இரண்டு பாடல்களும் பொருத்தமாகவே இருக்கின்றன. போலீஸ் - போராளிக் குழுவுக்கு இடையிலான மோதல் கதையில் முதன்மை பெற்றுள்ளதால் அதீத வன்முறை காட்சிகள் தவிர்க்க முடியாதவையாக இடம் பிடித்துள்ளன. அதனால், பலகீனமானவர்கள், சிறார்கள் ஆகியோர் இப்படத்தைத் தவிர்ப்பது நலம்.

மக்களின் பிரச்சினையை, அவர்களுக்கான அரசியலைப் பேசும் தரப்பை உள்ளடக்கிய ஒரு கதைக் களம், கொஞ்சம் தவறினாலும் பிரச்சாரமாக மாறிவிடும் ஆபத்தை சந்திந்துவிடும். அப்படி ஆகாமல் இருக்க ‘சினிமேடிக்’ தருணங்களை உருவாக்கி, அதன் வழியே சினிமா அனுபவத்தைச் சத்தியமாக்குவதுதான் ஒரு சிறந்த இயக்குநரின் திரை ஆளுமையாக இருக்க முடியும். அதில் வெற்றிமாறன் தனது பெயரின் பொருளை இம்முறையும் நிலை நாட்டியிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x