

துருக்கியில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக வெளியான செய்திக்கு 'விஸ்வரூபம் 2' படக்குழு மறுப்பு தெரிவித்தது.
'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டிற்குள் வெளியிடும் முனைப்பில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது.
சமீபத்தில் 'விஸ்வரூபம் 2' ட்ரெய்லர் குறித்து வெளியான செய்திக்கு "விஸ்வரூபம் 2 ட்ரெய்லர் குறித்த செய்தி தவறானது. ரசிகர்களின் ஆர்வத்துக்கு இணங்க படத்தின் பணிகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து ராஜ்கமல் நிறுவனம் அவ்வப்போது உரிய தகவல்களை வெளியிடும். விஸ்வரூபம் 2 வெளியீட்டை நாங்கள்தான் உறுதி செய்வோம். விஸ்வரூபம் இந்தி உரிமையும் எங்களிடமே இருக்கிறது" என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், துருக்கியில் 'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ராணுவ முகாமில் படப்பிடிப்பு நடைபெறும் என தகவல்கள் வெளியானது. இதனை கமல் ரசிகர்கள் பலரும் சந்தோஷத்துடன் பகிர்ந்து வந்தார்கள்.
இந்த தகவல் குறித்து படக்குழுவிடம் விசாரித்த போது "'விஸ்வரூபம் 2' படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால், அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளோம். அப்பணிகளுக்கு இடையே இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
என்ன காட்சிகள் பாக்கியுள்ளது, அதில் நடிக்கவுள்ள நடிகர்களிடம் தேதிகள் பெறும் விஷயங்கள் தொடங்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு தொடங்கப்படும் போது, அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். ஆனால் மிகவும் குறைவான காட்சிகளே இருப்பதால், சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கும்" என்று தெரிவித்தார்கள்.
'விஸ்வரூபம் 2' படப்பணிகள் முடிந்தவுடன், 'சபாஷ் நாயுடு' பணிகளைத் துவங்க கமல் திட்டமிட்டுள்ளார்.