

தமிழகத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்பு சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கமல் தெரிவித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல். அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கமல் அளித்த பதில்களின் தொகுப்பு
"ஜி.எஸ்.டி வரி வந்தபோது அதை நான் எதிர்த்தேன். குறைக்க வலியுறுத்தினேன். சிறிது குறைத்தார்கள், நன்றி சொன்னேன் இன்னும் குறைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். நான் கட்டபொம்மனும் அல்ல; இந்திய அரசு கிழக்கிந்திய கம்பெனியும் அல்ல. இது என்னுடைய அரசு. நான் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அரசு. அந்த உரிமையில் மக்களுக்கு எதிரான விஷயங்களை கேள்வி கேட்க எனக்கு உரிமை இருக்கிறது.
மாநில அரசு கேளிக்கை வரி விதித்ததையும் எதிர்த்தேன். சினிமாவுக்கு எந்த வரியும் விதிக்க கூடாது. அதேபோல மேஜைக்கு அடியில் நடக்கும் எல்லா பேரங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்பு சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரோட்டில் ஆங்காங்கே பள்ளம் இருந்தால் பார்த்து சொல்லலாம். இங்கு ரோடே பள்ளமாக இருக்கிறது. எல்லா துறையிலும் ஊழல் மலிந்திருக்கிறது.
நண்பர் ரஜினி சிஸ்டம் சரியில்லை என்று சொன்னது பற்றி கேட்கிறீர்கள். அதை முதலில் சொன்னது நான் தான். ரஜினி அரசியலுக்கு வந்தால் கட்சி தொடங்கினால் எல்லா கட்சியையும் விமர்சிப்பது போல அவர் கட்சியையும் விமர்சிப்பேன். நல்லது செய்தால் பாராட்டுவேன்.
பாவனா வழக்கில் கேரள காவல்துறையின் நடவடிக்கைகளை நான் பாராட்டுகிறேன். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தையும், நீதியையும் நம்புகிறேன்" என்று பேசினார் கமல்