

திரைப்படம் வெளியாகும்போதே அதன் டிவிடியை வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் திட்டத்தை இயக்குநர் சேரன் அறிமுகப்படுத்தியுள்ளார். ‘சி டூ எச்’ (சினிமா டூ ஹோம்) என்ற பெயரில் தொடங்கியுள்ள இந்த திட்டம் திரையரங்குகளுக்கு எதிரானதல்ல என்று அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் சேரன் பேசியதாவது:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தணிக்கை முடிந்த என்னுடைய ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் இன்னும் வெளியாகவில்லை. எப்படியோ ரிலீஸ் செய்துவிடுவோம் என்று இறங்கினால் என்னால் கடனை அடைக்க முடியாது. என்னைப்போல எத்தனையோ தயாரிப்பாளர்கள் இங்கே இருக்கிறார்கள். 2013- 2014-ம் ஆண்டில் வெளியான படங்களில் மொத்தம் 298 படங்கள் சென்சாருக்கு சென்றன. அதில் 143 படங்கள்தான் ரிலீஸானது. அதில் 12 படங்களால் மட்டுமே போட்ட பணத்தை எடுக்க முடிந்துள்ளது. திரையரங்குகளில் கூட்டம் இல்லை. அதோடு நவீன வசதிகள் கொண்ட திரையரங்குகளில் டிக்கெட் விலையும் அதிகமாகவே உள்ளது. இப்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘சினிமா டூ ஹோம்’ திட்டத்தின் கீழ் பல விநியோகஸ்தர்கள் பணிபுரிய இருக்கிறார்கள். ஒரு விநியோகஸ்தருக்கு 2 லட்சம் வீடுகள் வீதம், அவர்களுக்கு கீழ் மொத்தமாக 50 டீலர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் 4000 கதவு களை தட்டுவார்கள். இதன் மூலம் மட்டுமே திரைப்படம் வெளியாகும் முதல் வாரத்தில் சுமார் 25 லட்சம் டிவிடிக் களை விற்பனை செய்ய முடியும்.
இந்த திட்டம் திரையரங்கத்திற்கு எதிரானது அல்ல. திரையரங்கத்தில் ஓடிய பின்னர்தான் தயாரிப்பாளர்கள் அப்படத்தின் டிவிடியைக் கொடுப் பார்கள். அதுவரை திருட்டு டிவிடி வராமல் பார்த்துக்கொள்வது எங்கள் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.
இயக்குநர் அமீர் பேசும்போது, “ஆண்டுக்கு 125 முதல் 150 படங்கள் வரையிலும் ரிலீஸ் ஆகிறது. அப்படி என்றால் இங்கே 2 நாட்களுக்கு ஒரு படம் என்ற கணக்கு வருகிறது. இப்படி படத்தை மாற்றிக்கொண்டே இருந்தால் எப்படி படங்களை பார்க்க பிடிக்கும். ஆகவே, திரையரங்குகள் இல்லாத திரைப்படங்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை கிடைக்கும்” என்றார்.
வீடியோ மூலமாக கமல்ஹாசன் பேசியதாவது: நெருப்பை சுற்றி அமர்ந்துகொண்டு கதை சொன்ன காலத்திலிருந்து தெருக்கூத்து, நாடக மாகி, திரைப்படமாகி, தொலைக் காட்சிகளாகவும் மாறி இன்று கைப்பேசி யில் படம் பார்க்கும் அளவுக்கு மாறி வருகிறது இந்த தொழில் மாற்றத்துக்கு நாம் உட்பட்டே ஆக வேண்டும். வீட்டில் அமர்ந்து சினிமா பார்க்கும் இந்த மாற்றத்தால் திரையரங்குகள் மொத்தமாக அற்றுப்போய்விடும் என்பதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாரதிராஜா, கே. பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், சீமான் உள்ளிட்ட திரை உலகினர் பலர் கலந்துகொண்டனர்.