

சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிப்பதாக சிவாஜி குடும்பத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.
அடையாறில் ரூ.2 கோடியே 80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை அவரது பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைக்கிறார்.
இவ்விழா குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மணிமண்டப திறப்பு விழா அக்டோபர் 1-ம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறும். விழாவுக்கு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை வகிக்கிறார். மணிமண்டபத்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்துவைத்து, சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்" என்று தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு சிவாஜி குடும்பத்தினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாண்புமிகு அமைச்சர் அவர்களே,
சிவாஜி கணேசனுக்கு (எங்கள் தந்தைக்கு) மணி மண்டபம் அமைப்பது என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமாக இருந்தது. இப்போது, அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரே முன் நின்று மணிமண்டபத்தை திறந்து வைத்திருப்பார்.
அப்பாவின் மணி மண்டபத்தை அரசு திறந்துவைப்பதில் பெரு மகிழ்ச்சி. ஆனால், அந்த திறப்புவிழாவில் முதல்வரோ துணை முதல்வரோ கலந்து கொள்ளாதது மகிழ்ச்சிக்கு இணையாகவே ஏமாற்றத்தைத் தருகிறது.
தனது திரைப்படங்கள் வாயிலாக தமிழ் கலாச்சாரத்துக்கும் தமிழ் மொழிக்கும் தொண்டாற்றிய ஒரு பெரும் நடிகரின் மணி மண்டப திறப்பு விழாவில் அரசு சார்பில் முதல்வர், துணை முதல்வர் கலந்து கொள்ளாதது அப்பாவை அவமரியாதை செய்வதாகவே நாங்கள் கருதுகிறோம்.
எனவே, திறப்பு விழாவில் முதல்வர், துணை முதல்வர், அதிகாரிகள் கலந்து கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் குடும்பத்தினரும் சிவாஜி கணேசனின் ரசிகர்களும் உங்கள் தரப்பிலிருந்து நல்லதொரு பதிலுக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு சிவாஜி குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.