

அமைச்சர் அன்பழகன் கமல் சாரை ஒருமையில் பேசாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என விஷால் தெரிவித்துள்ளார்.
2009 - 2014-ம் ஆண்டுகள் வரைக்கான தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அச்சந்திப்பில் விஷால் பேசியதாவது:
''கலைஞர்களுக்கு மாநில விருதுகள் கிடைக்கும் போது பெருமைப்படுவார்கள். அத்தனை விருதை வாங்கிய கலைஞர்களுக்கு வாழ்த்தும், தமிழக அரசுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த விருதுகள் மற்றும் மானியம் வழங்கும் விழாவை பெரிய விழாவாக நடத்த ஆசைப்படுகிறோம். கூடிய விரைவில் அது நடக்கும் என நம்புகிறோம்.
வருடந்தோறும் தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கும் போது, திரையுலகிற்கு ஒரு நல்ல விஷயம். தாமதமாக அறிவிக்காமல், வருடந்தோறும் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என அரசாங்கத்திற்கு விண்ணப்பம் வைத்திருக்கிறோம். தயாரிப்பாளர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் மானியம் செல்லும் போது, அந்தக் குடும்பத்தினர் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.
தமிழக அரசின் விருதுகளை ஒரு குழுவே தீர்மானிக்கிறது. அந்த குழுவின் முடிவில் ஒரு சிலருக்கு ஆதங்கம் இருக்கும். விருதுகள் என்பது அனைவரையும் சந்தோஷப்படுத்த முடியாத ஒரு விஷயம். எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'அழகர்சாமியின் குதிரை' மற்றும் 'நான் மகான் அல்ல' இரண்டுமே நல்ல திரைப்படங்கள். அவருக்கு அடுத்தாண்டு விருதுகள் கிடைக்கும் என நம்புகிறேன்.
அமைச்சர் அன்பழகன் கமல் சாரை ஒருமையில் பேசாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதுவே விஷாலைச் சொல்லியிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். கமல் சாரைப் பற்றி பேசியதால் தான் பலரும் கேள்வி கேட்கிறார்கள். ஏனென்றால் கமல்ஹாசன் என்பவர் ஒரு முன்னுதாரணம். இந்திய திரையுலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
ஒவ்வொருவருமே தன்னுடைய கருத்தை தைரியமாக சொல்லக்கூடிய இடங்கள் உள்ளன. அந்த வகையில் கமல் சார் அனைத்து விஷயங்களையுமே வெளிப்படையாகப் பேசக்கூடியவர். இது கெடுதல் என நினைத்து எதிலுமே குதிக்க மாட்டார். நல்லது என நினைத்தால் மட்டுமே செயல்படக்கூடியவர்'' என்று விஷால் பேசினார்.