

கருப்பசாமி (சார்லி), அவர் மனைவி வள்ளியம்மாள் (ஈஸ்வரி ராவ்), மகள் மல்லிகா (வரலட்சுமி சரத்குமார்) மூவரும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒதுக்குப்புறமான வீடு ஒன்றில் வசித்துவருகிறார்கள். கடன் தொல்லையால் சொந்தமான நிலத்தை விற்று அதே நிலத்தில் கூலிகளாக வேலை பார்க்கிறார்கள். வறுமையால் தனக்குத் திருமணம் நடக்கவில்லை என்ற ஏக்கமும் மல்லிக்கு இருக்கிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் பணியை உதறிவிட்டு ஊர் ஊராகச் சுற்றும் அர்ஜுனன் (சந்தோஷ் பிரதாப்)இவர்கள் வீட்டில் ஓர் இரவு தங்கிக்கொள்ள அனுமதி கேட்கிறார்.
ஆரம்பத் தயக்கத்துக்குப் பிறகு ஒப்புக் கொள்கிறார்கள். அர்ஜுனனிடம் நிறைய பணமும் நகைகளும் இருப்பதைத் தெரிந்துகொண்டு அவனைக் கொன்றுவிட்டு அதை எடுத்துக் கொள்ளத் திட்டமிடுகிறாள் மல்லிகா. இந்த முடிவுக்கு பெற்றோரையும் இணங்க வைக்கிறாள். அர்ஜுனன் யார்? அவன் கொல்லப்படுகிறானா தப்பித்தானா? இறுதியில் மல்லியின் குடும்பத்துக்கு என்ன ஆகிறது? என்பது மீதிக் கதை.
1915-ல் ரூபர்ட் ப்ரூக் என்பவரால் எழுதப்பட்ட ஆங்கில ஓரங்க நாடகம் 1980-களில் கன்னடத்தில் அரங்கேற்றப்பட்டது. அதைத் தழுவி 2018ல் ‘ஆ காரல ராத்ரி’ என்னும் கன்னடப் படத்தை இயக்கிய தயாள் பத்மநாபன் அதை தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். 18 கன்னடப் படங்களை இயக்கியுள்ள தமிழரான தயாளுக்கு இது முதல் தமிழ்ப் படம்.
மனித வாழ்வில் ஆசையைத் தவிர்க்கவே முடியாது என்னும் யதார்த்தத்தையும் ஆனால் அந்த ஆசையாலேயே அவன் வாழ்வு தலைகீழாக மாறிவிடும் ஆபத்தையும் குறைவான கதாபாத்திரங்கள், இயல்பான கதைச்சூழல், யதார்த்தமான காட்சிகள் ஆகியவற்றுடன் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன்.
படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்கள் ஒரு பெரும் பாதகத்தைச் செய்ய முடிவெடுத்தாலும் அவர்களை அப்படிச்செய்யத் தூண்டுவது வறுமையும் கடன் தொல்லையும் ஊராரின் அவமதிப்பும்தான் என்பதை உணரவைத்து அவர்கள் மீது பரிவை ஏற்படுத்தியிருப்பது திரைக்கதையின் வெற்றி. அதே நேரம் தீய எண்ணங்களும் செயல்களும் எந்த வகையிலும் நியாயப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு மணி நேரத்துக்குக் குறைவான நீளமே இருந்தாலும் முதல் பாதி மிக மெதுவாக நகர்கிறது. ஒரு முழுநீளப் படத்துக்குத் தேவையான அடர்த்தி, கதையில் இல்லையோ என்று தோன்றுகிறது.
படத்தில் வரும் கிராமம், வீடுகள், கதைச்சூழல், கதாபாத்திரங்கள், அவர்களின் பேச்சுவழக்கு, நடை, உடை, பாவனை என அனைத்தும் நம்மை 1980களின் தருமபுரி மாவட்ட கிராமத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றன. வரலட்சுமி, சார்லி, ஈஸ்வரி ராவ், சந்தோஷ் என முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்ற நடிகர்கள் மட்டுமல்லாமல் பார்வையற்றவராக வரும் சென்றாயன், காவலராக வரும் கவிதாபாரதி, சாராயக் கடை முதலாளி சுப்ரமணிய சிவா என ஓரிரு காட்சிகளுக்கு மட்டும் வந்து செல்லும் நடிகர்களும் கதாபாத்திரமாகவே உருமாறியிருக்கிறார்கள்.
செழியனின் அற்புதமான ஒளிப்பதிவு, கதை நடக்கும் காலத்துக்கும் களத்துக்கும் நம்மைக் கடத்திச் சென்றுவிடுகிறது. சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை இரண்டாம் பாதியில் தேவையான பதட்டத்தைக் கூட்ட உதவியிருக்கிறது. கதைப் போக்கில் ஒலிக்கும் பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன.
கேளிக்கையை முதன்மைப்படுத்தாமல் மனித வாழ்வின் தவிர்க்க முடியாத யதார்த்தங்களையும் எளிய மனிதர்கள் துண்டாடப்படும் சமூகச் சூழலையும் பதிவுசெய்திருக்கும் இந்தப் படத்தை மனதார வரவேற்கலாம்.