

காதலின் பெயரால் இளம்பெண்களின் நம்பிக்கையைப் பெற்று, நெருக்கம் காட்டி, ஆபாச வீடியோ எடுத்து, அதைக் காட்டியே அவர்களைத் தவறான வழிக்குக் கட்டாயப்படுத்திப் பணம்பார்க்கிறார்கள் 5 இளைஞர்கள்.
துரைபாண்டியின் (டேனியல் பாலாஜி) தலைமையில் குழுவாக இயங்கும் இவர்கள், தங்கள் வழிக்கு இணங்காத பெண்களைக் கொலை செய்கிறார்கள். ஜெஸ்ஸி என்கிற பெண்ணை அக்குழுவிடமிருந்து காப்பாற்றுகிறார் கபடி வீரர் ஜீவா (இஷான்).
இதையறிந்து பாதிக்கப்பட்ட பெண்கள், ஜீவாவின் உதவியை நாடி வர, ஜீவாவையும் அவர் காப்பாற்ற முயலும் பெண்களையும் பழிவாங்கத் துடிக்கிறான் துரைபாண்டி. அவனிடமிருந்து ஜீவாவும் மற்றவர்களும் எப்படித் தப்பித்தார்கள் என்பது கதை.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கதைக் களமாகக் கொண்டு வெளியாகும் படங்களின் வரிசையில் புதிதாகச் சேர்ந்துள்ள இப்படம், ‘உங்களோட பயம்தான் அவனுக்கு ஆயுதம். எதுக்கு பயந்து பயந்து ஓடுறீங்க?’ என்று தைரியம் கொடுக்கிற நாயகனின் குரலாக ஒலிக்கிறது.
இதுபோன்ற படங்களில் ஹீரோயிசம் மிதமிஞ்சிப்போய், பிரச்சினை இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிடும். இதில் அளவான, அலட்டல் இல்லாத ஹீரோயிசம் இருக்கிறது.
அதேநேரம், கதையின் போக்கில் நிகழும் காட்சிகள் வழியாக விழிப்புணர்வு கொடுத்திருக்கிறார், எழுதி, இயக்கியிருக்கும் மித்ரன் ஆர். ஜவஹர். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களை வைத்தே வில்லனை சிக்க வைக்கும் உத்தி, இரண்டாம் பாதி திரைக்கதைக்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.
ஜீவாவாக நடித்து நாயகனாக அறிமுகமாகியுள்ள இஷான், வசனங்களை நிதானமாகப் பேசுவதில் கவனம் ஈர்த்தாலும் முகபாவ நடிப்பு போதாமையுடன் இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் அவரது உயரமும்வேகமும் கச்சிதமாக இணைந்துவிடுகின்றன. ஹீரோயிசம் சார்ந்த காட்சிகளை அதிகம் நம்பாமல், பிரச்சினையைப் பேசும் படத்தில் மற்றக் கதாபாத்திரங்களுக்கு ஒதுங்கி வழிவிட்டிருப்பதைப் பாராட்டலாம்.
நாயகியாக வரும் பிரணாளி சின்னச் சின்ன முகபாவங்களில் கூட ஸ்கோர் செய்துவிடுகிறார். ஆனால், பாடல் காட்சிக்கும், நாயகனின் வலிமையை நம்புவதற்கும் மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறார். நாயகியின் தோழியாக வரும் நிஷ்மா செங்கப்பா, தேவைக்கு அதிகமாகவே நடித்திருக்கிறார்.
நாயகனின் நண்பனாக வரும் சத்யன்நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோன்றினாலும் அவருக்கான இருப்பென்று படத்தில் பெரிதாக ஏதுமில்லை.
அதிகார வர்க்கத்தின் ரகசியஆதரவை துணைக்கு வைத்துக்கொண்டு ஆபத்தான ஆட்டங்கள் ஆடும் துரைபாண்டியாக டேனியல் பாலாஜி, தனது ‘டெம்பிளேட்’ வில்லன் நடிப்பை கொடுத்து பயமுறுத்துகிறார்.
ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரிநந்த் இசையில் பாடல்கள் கேட்கவும் விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவில் பார்க்கவும் நன்றாக இருக்கின்றன.
‘உங்களுக்குப் பிரச்சினை என்றால் நீங்கள்தான் உங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று ஸ்மார்ட் போன் யுகத்தில் இளைய தலைமுறைக்கு எச்சரிக்கை செய்கிறது இந்தப் பொழுதுபோக்கு சினிமா.