

கருணாநிதி உடனான தொடர்பு, அவர்களுடைய அரசியலையும் கடந்திருந்தது என்று கமல் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜுன் 3ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தனது 94வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். மேலும், சட்டமன்ற பணிகளில் வைரவிழாவையும் எட்டியுள்ளார். இவ்விரண்டையும் ஒன்றிணைந்து பிரம்மாண்டமாக கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது.
கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் வைர விழா ஆகியவைத் தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல். அதில் அவர் பேசியதாவது:
"கலைஞர் அவர்களின் வசனம் என்பது, நாடக - சினிமா நடிகர்களுக்கு ஒரு கேட் பாஸ் அனுமதிச்சீட்டு மாதிரியான விஷயம். அந்த வசனங்களை சரியாகச் சொல்லக்கூடிய நடிகன், நடிப்பதற்கான தகுதியை எய்திவிட்டான் என்ற நிலையிருந்தது. ஆகவே, நீச்சல் தெரியுமா என்றவுடன் குளத்தில் இறங்கி நீச்சல் அடித்து காட்டுவதுப் போல், நடிக்க வருமா என்று சொல்லும் போது கலைஞரின் வசனத்தை சிவாஜி குரலில் பேச முற்படுவது தான் அந்த காலத்தில் ஒரு ஆரம்பநிலை பாடமாக இருந்தது.
அப்படித் தான் நான் மூன்றரை வயது பையனாக இருந்த போது, அந்த வசனங்களை மழலை மாறாமல் சொல்வேன். என்னை விட சிறப்பாக சொல்பவர்களை விட, எனக்கு கிடைத்த ஒரு பாராட்டு என்னவென்றால் மூன்றரை வயது குழந்தைக்கு அத்தனையும் ஞாபகம் இருக்கிறதே என்பது சந்தோஷமான ஆச்சர்யம். அதை சிவாஜி மற்றும் கலைஞர் அவர்களிடம் சொல்லிக் காட்டியிருக்கிறேன். இவர்கள் ஏ.வி.எம் கலைக்கூடத்திற்கு வருகை தருபவர்கள். தூரத்திலிருந்து வேடிக்கைப் பார்த்து, இவர் தான் அதை எழுதியவர் என்று அடையாளம் காட்ட பார்த்திருக்கிறேன்.
நெருக்கமான பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது. சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவரிடமும் நெருங்கி பழகிய அளவுக்குக் கூட இவரிடம் நான் நெருங்கவில்லை. பிற்பாடு 'சட்டம் என் கையில்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, டி.என்.பாலு அவர்கள் என்னைப் பற்றி அவரிடம் சொல்ல, 100வது நாள் விழாவிற்கு வந்திருந்தார். அப்போது தான் கிட்டதட்ட நெருக்கமாக உட்காரும் வாய்ப்பே எனக்கு கிடைத்தது. அதற்குப் பிறகு அது வழக்கமான தொடர்பாகவும், நல்ல படங்கள் செய்யும் பொழுதெல்லாம் அவரிடம் அதைப் போட்டுக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எப்போதுமே இருந்தது. அவரும் காட்டாமல் போய்விட்டால், ஞாபகப்படுத்தி 'ஏன் படம் காட்டவில்லை' என்று கேட்குமளவுக்கு எங்களுடைய உறவு வலுத்தது.
அதில் உச்சகட்டமாக 'அவ்வை சண்முகி' படத்துக்கு மேக்கப் போட்டவுடன், அவருடைய வீட்டுக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டதெல்லாம் உண்டு. 'தசாவதாரம்' படத்தின் போது கலைஞரின் கையால் கிள்ளப்பட்டது என் கன்னம். அவருக்கு படம் அவ்வளவு பிடித்துப் போனது. ட்ரெய்லர் உள்ளிட்ட வெவ்வேறு வடிவங்களில் பார்த்தார். அப்படத்தை எழுதிக் கொண்டிருக்கும் போது 'என்ன செய்து கொண்டிருக்கிறாய்' எனக் கேட்டு 'இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும்' என்று அவர் சொன்னதை நான் ஏற்றுக் கொண்டேன். காரணம், அவர் மூத்த அரசியல் தலைவர் மாத்திரமல்ல, தமிழ் அறிஞர் மட்டுமல்ல. அற்புதமான திரைக் கதாசிரியர். வசனம் எழுதக் கூடியவர். அவர் வேலை செய்த சினிமா மேதைகள் எல்லாம், சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட பெயர்களாக மாறிவிட்டன. அவருடைய பெயர் உட்பட.
இப்படி, இப்போது தான் இந்த வைரவிழாவின் போது பேசுவதாக நினைத்துவிட வேண்டாம். நான் ஒருமுறை மேடையில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சியிலிருந்த காலம். எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த ஆசான்கள் என கலைஞர், சிவாஜி மற்றும் கவியரசு கண்ணதாசன் என 3 பெயர்களைச் சொன்னேன். அடுத்த நாள் தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. பேசியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். '3 ஆசான்களைப் பற்றி சொல்லியிருக்கிறாய், நான் எல்லாம் அதில் இல்லையா' என்று கேட்டார். ’உங்கள் பெயரே வாத்தியார்’ என்று பதிலளித்தேன். ’இல்ல. நீ பேசியது சரி தான்’ என்று சொல்லி வைத்த பெருந்தன்மை இன்றைக்கும் நான் மறக்க மாட்டேன். கோபித்துக் கொள்கிறாரோ என்று நினைத்தேன். ஆனால் என்னைப் பாராட்டி வந்த தொலைபேசி அழைப்பு தான்.
என்னுடைய தொடர்பு, இவர்களுடைய அரசியலையும் கடந்திருந்தது. இன்றும் அவ்வாறாகவே இருக்கிறது. அவர் ஏற்படுத்திருக்கும் இந்த சரித்திரம், என் கலையுலகிற்கு சம்பந்தமில்லாதது. ஆனால், என் உலகம் சம்பந்தப்பட்டது. அரசியலில் வைரவிழா கொண்டாடுவதற்கு எவ்வளவு இளமையில் அவர் வந்திருக்க வேண்டும், எவ்வளவு முதுமை வரை தாங்கிப் பிடித்திருக்க வேண்டும் என்பதற்கான அடையாளங்களாக இவை இருக்கின்றன.
’ஒருமுறை 2ம் தேதி மும்பையில் இருந்தாயா’ என்று கேட்டார். ’ஆமாங்க’ என்றேன். ’அப்புறம் இங்க வந்துட்டல’ என்றார். ’ஆமாம், வந்துட்டேன்.. ஏன் கேட்கிறீர்கள்’ என்று கேட்டேன். ’3ம் தேதி இங்கு தானே இருந்தாய். ஏன் என்னை வந்து பார்க்கவில்லை’ என்று கேட்டார். அது அவருடைய பிறந்த நாள். ’அடிக்கடி வருவதில்லையே. எப்போதாவது தானே வருவேன். வர்றேன்ங்கய்யா’ என்றேன். ’எவ்வளவு நேரம் இருக்கு’ என்று சொன்னார். இதை கேட்டு 10 வருடங்களாகிவிட்டது. ’இல்லைங்கய்யா.. இன்னும் நேரம் இருக்கிறது. நான் வருகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். அவருக்கு 84 வயது இருக்கும் போது பேசினார். இப்போது வயது 94. வாழ்த்துச் சொல்ல வயதில்லை என்று தான் வழக்கமாக சொல்வார்கள். வாழ்த்துவதற்கு வயதெல்லாம் தேவையில்லை. மனிமிருந்தால் போதும். அது எனக்கு சிறுவயது முதல் இருக்கிறது. இன்றும் இருக்கிறது. வாழ்க கலைஞர்" என்று பேசியுள்ளார் கமல்ஹாசன்.