

நடிகர் சங்க கட்டிட சர்ச்சை தொடர்பாக உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சர்ச்சைத் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தில் 33 அடி சாலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் ஸ்ரீரங்கன் என்ற வழக்கறிஞர் ஏற்கனவே சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸில் மனு கொடுத்திருந்தார். மேலும், இது தொடர்பாக அண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கன் இருவரும் இணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்கள்.
இந்த வழங்கு இன்று உயர்நீதிமன்றத்தில் என்.கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகிய நீதிபதிகள் மத்தியில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக சென்னை மாநகராட்சி, நடிகர் சங்கம், நடிகர் சங்க அறக்கட்டளை ஆகியோருக்கு நாளை பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்கள்.
மேலும், "இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். கட்டிடத்தை ஆய்வு செய்யாமல் எப்படி மாநகராட்சி அனுமதி கொடுத்தது. சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?" என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.