‘மன வருத்தமாக உள்ளது. தவறான தகவல் பரப்பாதீர்கள்’ - மயில்சாமி மறைவு குறித்து மகன் பேட்டி

‘மன வருத்தமாக உள்ளது. தவறான தகவல் பரப்பாதீர்கள்’ - மயில்சாமி மறைவு குறித்து மகன் பேட்டி
Updated on
1 min read

“அப்பாவின் மறைவு குறித்து தவறான தகவல்கள் பரவுவது வருத்தமாக உள்ளது. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்’’ என நடிகர் மயில்சாமியின் மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள் அன்பு மற்றும் யுவன் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் அவர்கள் பேசும்போது, “அப்பாவின் மரணம் குறித்தும் அவரது மறைவுக்கு இதுதான் காரணம் எனவும் ஏதேதோ காரணங்கள் சொல்லி பல யூடியூப் சேனல்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். உண்மையில் இது பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அதனால், அப்பாவின் மரணத்தின் போது என்ன நடந்தது என்பதைக் கூறவே இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. அன்று சிவராத்திரி அன்று இசைக் கச்சேரியில் கலந்து கொண்ட போது இரவு ஆகிவிட்டது. அப்பா ஏற்கெனவே ஹார்ட் பேஷண்ட் என்பதால் அவரை வீட்டிற்கு போக சொல்லி சிவமணி சார் சொன்னார். வீட்டிற்கு வந்து சாப்பிட்ட பிறகு அசெளகரியமாக உணர்ந்தார். சுடு தண்ணீர் வைத்து கொடுத்தேன்.

பிறகு மூச்சுவிட கஷ்டமாக இருக்கிறது என சொன்னதும் அவசரத்திற்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு நான் காரில் அழைத்துச் சென்றேன். கார் ஓட்டிக்கொண்டு போகும்போதே, அப்பா என் மீது சாய்ந்துவிட்டார். பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது, அப்பாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக சொன்னார்கள். எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது. இதுதான் நடந்தது. ஒருவருக்கு எதாவது ஒன்று என்றால் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடமே அழைத்து பேசி உறுதி செய்யுங்கள். மாறி மாறி வரும் தகவல்களை பகிர்ந்து சம்பந்தப்பட்டவர்களை மன உளைச்சலுக்கு தள்ளாதீர்கள்” என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in