

அரசாங்கமே இலவசக்கல்வி கொடுக்கும் நாளே மாற்றத்தின் முதல் நாளாக இருக்கும் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. கடந்த மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2014, 2015 ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் 90.6% ஆக இருந்தது. 2016-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.4% ஆக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.1% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு தேர்ச்சி பெற்றோர் 0.7% கூடுதலாகும்.
இந்நிலையில் தமிழக அரசின் பாடத்திட்டங்கள் குறித்து இயக்குநர் சேரன் "பாடத்திட்டங்களை மாற்றி கல்வி நிறுவனங்களை அரசாங்கம் நடத்தி எல்லோருக்கும் இலவசக்கல்வி கொடுக்கும் நாளே நாட்டின் உண்மையான மாற்றத்தின் முதல் நாள்.
எந்த துறை சார்ந்த படிப்பாக இருந்தாலும் சிறந்த மாணவனுக்கு இலவசக்கல்வி. இது அரசின் கடமையாக மாறினால் நாட்டில் பிரச்னைகள் குறைய வாய்ப்புண்டு. நல்ல திறமையான மாணவர்கள் நாளை திறமையும் நேர்மையும் மிகுந்த அரசு அதிகாரிகளாக உருவாக வாய்ப்புள்ளது.
கல்வி இலவசமெனில் நாட்டின் மீது பற்று வரும். அதிக சதவீதங்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கும் விருதுநகர் மாவட்டம் கல்விகண் திறந்த பெருந்தலைவர் பிறந்த ஊர் மாவட்டம்.. வாழ்த்துக்கள். அதிக கட்டணம் வசூல் செய்யும் கல்வி நிறுவனங்களில் மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் என குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்களே இனியாவது சிந்தியுங்கள்.
போக்குவரத்து நெருக்கடி குறைய வசிக்கும் ஏரியாக்களில் இருக்கும் பள்ளி கல்லூரிகளில் மட்டுமே குழந்தைகளை சேர்க்கவேண்டும் என அரசு ஆணையிடலாம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சேரன்.