

சிவகார்த்திகேயனோடு நடிக்கும் போது மட்டும் மிகவும் கவனமாக இருப்பேன் என்று சூரி தெரிவித்துள்ளார்.
'மனம் கொத்தி பறவை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' உள்ளிட்ட பல படங்களில் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்தவர் சூரி. விரைவில் பொன்.ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் சிவகார்த்திகேயனோடு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூரி. இதன் படப்பிடிப்பு விரைவில் தென்காசியில் துவங்கவுள்ளது.
பல்வேறு நாயகர்களோடு நடித்தாலும் சிவகார்த்திகேயனோடு நடிக்கும் போது மட்டும் கவனத்தோடு இருப்பேன் என்று சூரி தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் குறித்து, "சில நடிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் இயல்பாக பேசிக் கொண்டே இருப்பார்கள். கேமிரா முன்னால் வேறு மாதிரியாகி நடிப்பைக் காட்டி, நம்மை தூக்கிச் சாப்பிட்டுவிடுவார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயனோடு நடிக்கும் போது மட்டும் ரொம்ப கவனமாக இருப்பேன்.
அவருடன் படப்பிடிப்பு என்றால் காலையில் குளிக்கும் போதே, அன்றைக்கான காட்சிகளை யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். 2 பேருமே படப்பிடிப்பு தளத்தில் இயல்பாக பேசிக்கிட்டு இருக்கும் போதே, அடுத்த காட்சிக்கும் எந்த மாதிரியான வார்த்தைகளைப் போடலாம், எப்படி நடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருப்போம்.
கேமிரா முன்னால் நின்றவுடன் எங்களுக்கு தெரிந்ததை நடித்துக் காட்டி காட்சியை கலகலப்பாக ஆக்கிவிடுவோம். நான் நான்கைந்து காட்சிகளில் முன்னணியில் இருப்பேன். ஆனால், ஒரே ஒரு வசனம் மட்டும் பேசி நான்கைந்து காட்சிக்கான கைதட்டலையும் ஒரே காட்சியில் வாங்கிவிட்டு போய்விடுவார். அவருக்கு அந்த திறமை உண்டு. 'ரஜினி முருகன்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் காமெடி காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்புக்கு இது தான் காரணம்" என்று தெரிவித்துள்ளார் சூரி.