மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன்: ரஜினிகாந்த்

மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன்: ரஜினிகாந்த்
Updated on
1 min read

நகைச்சுவை நடிகர் மயில்சாமி(57), நேற்றுமுன் தினம் அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் உடலுக்கு ஏராளமான திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். அவர் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது.

இந்நிலையில் அவர் உடலுக்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறும்போது, “மயில்சாமி என் நீண்ட நாள் நண்பர். மிமிக்ரி கலைஞராக இருந்த போதிலிருந்தே தெரியும். அவர் எம்.ஜி.ஆர் ரசிகர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம். சினிமா பற்றி பேச மாட்டார். சிவன் பற்றித் தான் பேசுவார். நாங்கள் நண்பர்கள் தான், ஆனால் அதிக படங்களில் இணைந்து நடிக்கவில்லை.

கார்த்திகை தீபத்தின் போது எனக்கு போன் செய்துவிடுவார். கடந்த கார்த்திகை தீபத்தின்போது பேச முடியவில்லை. நகைச்சுவை நடிகர்கள் விவேக், மயில்சாமி இறப்பு சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாதது. மயில்சாமி மகா சிவராத்திரி நாளில் உயிரிழந்தது தற்செயலானது இல்லை. சிவனின் கணக்கு அது. அவரின் தீவிர பக்தரை அவரின் உகந்த நாளில் அழைத்துச் சென்றுவிட்டார். மயில்சாமியின் கடைசி ஆசையை கேள்விப்பட்டேன். அதை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்” என்றார்.

நடிகர் மயில்சாமி, மறைவுக்கு முன் மேலக்கோட்டையூரில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலில் நடந்த சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் டிரம்ஸ் சிவமணியிடம், ‘இந்த அபூர்வமான சிவனுக்கு ரஜினி சார் கையால் பாலாபிஷேகம் செய்ய வேண்டும்’ என்று ஆசையாகக் கூறியிருந்தார். அதை நிறைவேற்றுவதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in