Published : 18 Feb 2023 09:20 PM
Last Updated : 18 Feb 2023 09:20 PM

இளையராஜாவுடன் இசையிரவு 28 | ‘பச்ச மலப்பூவு நீ உச்சி மலத்தேனு...’ - காதோரம் சங்கதி பாடும் லோலாக்கு!

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் 1990-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘கிழக்கு வாசல்’. இளையராஜாவின் இசையில் அதிகமான ஹிட் பாடல் வாய்க்கப் பெற்றவர்களில் நடிகர் கார்த்திக் மிக முக்கியமானவர். அவரது அறிமுக திரைப்படத்தில் இருந்தே ராஜாவின் இசையில் அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் பாடல்கள் அத்தனையும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களுக்கு இணையானவை. அந்த வகையில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் மனதுக்கு எப்போதுமே மிகவும் நெருக்கமானவை.

அழும் குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி சோறூட்டுவதைப் பார்த்திருப்போம். தூரத்தில் தெரியும் வெள்ளிப்பூத்த வானத்தில் தென்படும் நிலாத்துண்டையும் சேர்த்து உண்ட குழந்தை சிறிது நேரத்தில் உறங்கிப்போகும். இசைஞானி இளையராஜாவின் இசையும் இப்படி நிலாவைக்காட்டி சோறூட்டும் வகையைச் சேர்ந்ததுதான். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப் பாடல்.

இசைஞானி இசை பாடல் கேட்பவர்களை மயங்கவும் வைக்கும், கிறங்கவும் வைக்கும். ஆனால், இந்தப் பாடல் உறங்கவைக்கும். காரணம், பச்சமலப்பூவு, உச்சிமலத்தேனு போன்ற மிக எளிமையான சொற்களைக் கொண்டு பாடல் எழுதப்பட்டிருப்பதோடு, மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பிபி இந்தப் பாடலை அத்தனை வாஞ்சையோடு பாடியிருப்பார். அதற்கேற்ற வகையில் ராஜாவும் தனது இசைக்கோர்ப்பால் இந்தப் பாடலைக் கேட்பவர்களின் மனங்களில் நிலைநிறுத்தியிருப்பார்.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'பச்சமலப் பூவு' பாடலை இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் எழுதியிருப்பார். எஸ்பிபி குரலில்தான் இந்தப் பாடலை பதிவு செய்ய வேண்டும் என்று பல நாட்கள் காத்திருந்ததாக ஆர்.வி.உதயகுமார் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதற்கான காரணம் ஒவ்வொரு முறை இந்தப் பாடலைக் கேட்கும்போதும் பாடலைக் கேட்பவர்களால் உணர முடியும்.

மரத்தூண் ஒன்றில் தாளம் தட்டியபடிதான் இந்தப் பாடலின் பல்லவி தொடங்கியருக்கும். "பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு, குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு" இந்த வரிகளை பாடி முடித்தப் பிறகு, வரும் புல்லாங்குழல் போதும்... பாடல் கேட்பவர்கள் மெய்,வாய், கண் எல்லாமே சொக்கிப்போகும். அதுவும் அந்தப் புல்லாங்குழல் இசை முடிந்த கணத்தில் விழும் கிடார் கார்ட்டைத் தொடர்ந்து பாடலின் பல்லவி தபோலாவுடன் சேர்ந்து தொடங்கப்பட்டிருக்கும் அழகே ஒரு கவிதை போல் அமைக்கப்பட்டிருக்கும்.

"பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி
சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்" என்று பாடலின் பல்லவி எழுதப்பட்டிருக்கும். "அழகே பொன்னுமணி, சிரிச்சா வெள்ளிமணி" இந்த வரிகளுக்கு இடைப்பட்ட இடைவெளிகளில் புல்லாங்குழலை சினுங்க செய்து, பாடல் கேட்பவர்களை ரகசிய புன்னகை பூக்கச் செய்திருப்பார் ராகதேவன்.

முதல் சரணத்துக்கு முன்வரும் இடையிசை புல்லாங்குழலில் இருந்தே தொடங்கப்பட்டிருக்கும். அது முடியும் இடத்தில் பாடல் கேட்பவர்களின் மனங்களைப் பிடிக்க வயலின்களைக் கொண்டு வலைவீசி, சிக்கிக்கொண்டவர்களின் மனங்கள் துள்ளிக் குதிப்பதை சந்தூரின் இசையால் அள்ளியிருப்பார் ராகதேவன்.

"காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்". இந்தப் பாடல் கேட்பவர்களை உறங்க வைக்க வேண்டும் என்பதாலோ என்னவே இந்தப் பாடலின் எந்த வார்த்தையையும் அழுந்தப் பாடப்பட்டிருக்காது. அதுவும், மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம், அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம், வரிகளை எல்லாம், நீராகாரத்தில் கற்றாழையை கலந்து குடிப்பது போல அவ்வளவு லாவகமாக பாடியிருப்பார்.

இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசை கிடாரில் இருந்து தொடங்க, அதன் பின்னணியில் புல்லாங்குழல் இசை பாடல் கேட்பவர்களின் மங்களில் தொக்கி நிற்கும் மெல்லிய சோகத்தை வெளிப்படுத்தும். தொடர்ந்து வரும் வயலின்களின் துணைகொண்டு பாடல் கேட்பவர்களின் மனங்களை தூரிகட்டி ஆட வைத்திருப்பார் இசைஞானி. அதன்பின் புல்லாங்குழலும், கிடாரும் ஒன்றையொன்று கொஞ்சிக் கொள்ள பாடல் கேட்பவர்கள் நெஞ்சம் துள்ளும்.

"பூநாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாமல் தடம் பாா்த்து வந்த வழி போக
சித்திரத்துச் சோல முத்துமணி மாலை
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணிலே நூல்புடிச்சு சேல தச்சுத் தாரேன் ஹோய்" - இந்த இரண்டாவது சரணத்தில், பூநாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண, என்ற வரியை எஸ்பிபி பாடும்போது, நா....ண என்று பாடியிருப்பார் அந்த இடத்தில் நிச்சயம் நிலா வெட்கப்பட்டிருக்கும்.

இந்தப் பாடலில் நிலா வெளிச்சம் வீட்டில் விழும் வகையில் திறந்தவெளியுடன், நான்கு புறமும் திண்ணை வைத்தத வீட்டில் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கும். திண்ணையின் ஒருபுறத்தில் ஆளுயர ஊஞ்சல் ஒன்றும் ஆடிகொண்டிருக்கும். இவைத் தவிர பொள்ளாச்சியின் பசுமையும் குளிர்ச்சி அந்த வீட்டிற்குள் நிரம்பியிருக்கும். காட்சிப் படிமங்களான இவை அனைத்தையும் மறக்கச் செய்து, கிடார், கீபோர்ட், புல்லாங்குழல், வயலின்கள், தபேலா மற்றும் பிற தாள வாத்தியங்களால் பாடல் கேட்பவர்களின் மனதினுள் இசை படிமங்களாக கடத்தியிருப்பார் ஞானதேவன். ராஜாவின் ஈர்ப்பிசை நீளும்....

பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு பாடல் இணைப்பு இங்கே

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x