மீண்டும் பாகுபலி 2 சர்ச்சை: வளைகுடா நாடுகளில் திரையிடல் நிறுத்தம்

மீண்டும் பாகுபலி 2 சர்ச்சை: வளைகுடா நாடுகளில் திரையிடல் நிறுத்தம்
Updated on
1 min read

'பாகுபலி 2' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், வளைகுடா நாடுகளில் திரையிடல் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது 'பாகுபலி 2'.

இப்படம் வெளியான 9 நாட்களில் ரூ.1000 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ரூ.1000 கோடி வசூலித்து சாதனை படைத்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது 'பாகுபலி 2'.

இந்நிலையில், 'பாகுபலி 2' படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் இதன் திரையிடல் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து விசாரித்த போது, "’பாகுபலி 2’ தயாரிப்பாளர் படத்தின் இந்தி போக இதர மொழிகளின் வெளிநாட்டு உரிமையை ஒருவருக்கு கொடுத்திருந்தார். அவர் தான் ஒட்டுமொத்த தமிழக வெளியீட்டு உரிமையையும் பெற்றிருந்தார். இருவருக்கும் இடையே நடைபெற்ற பணப்பிரச்சினையில்தான், படம் வெளியான அன்று முதல் காட்சி ரத்து செய்யப்பட்டு இருந்தது.

தற்போது இருவருக்கும் இடையே பணப்பிரச்சினைகள் இன்னும் முடிவாகவில்லை. 2 வாரத்துக்கு மட்டுமே, KDM எனப்படும் பட உரிமையை வளைகுடா நாடுகளுக்கு 'பாகுபலி 2' தயாரிப்பாளர் கொடுத்திருந்தார். அதனை ரத்து செய்துவிட்டதால், இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் அப்படம் நீக்கப்பட்டு, விளம்பரங்களும் நிறுத்தப்பட்டன.

அவுட்ரேட் (OUTRATE) முறையில் வாங்கியிருந்தாலும் தற்போதுள்ள லாபத்திலும் பங்கு கேட்டு வருகிறார் தயாரிப்பாளர். இந்த சர்ச்சையால் பட வெளியீடு நிறுத்தப்பட்டது. நல்ல வசூல் செய்துக் கொண்டிருப்பதால் கண்டிப்பாக படத்துக்கு பின்னடைவு தான் " என்று தெரிவித்தார்கள்.

வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் சமூகவலைத்தளத்தில் தயாரிப்பாளர் ஷோபு மற்றும் 'பாகுபலி 2' படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால, படக்குழுவினர் இந்த சர்ச்சை குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

அவுட்ரேட் (OUTRATE) முறை என்றால் என்ன?

OUTRATE முறை என்றால் படத்தின் வெளியீட்டு உரிமையை மொத்தமாக ஒரு தொகை கொடுத்து வாங்கிவிடுவார்கள். இந்த முறையில் லாபம் மற்றும் நஷ்டம் என்று எது வந்தாலும், முழுப் பொறுப்பும் வாங்கியவருக்கு மட்டும் தான். படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்க கூடாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in