

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மு.மாறன் இயக்கியுள்ள படம், ‘கண்ணை நம்பாதே’. இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உட்பட பலர் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரிக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் மு.மாறன் கூறியதாவது: இது கிரைம் த்ரில்லர் படம். ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் அப்பாவி, அதில் இருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் கதை. உதயநிதி, கிராபிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவராக நடிக்கிறார். அவரிடம் முதலில் காதல் கதை ஒன்றைச் சொன்னேன். ‘கதை நன்றாக இருக்கிறது. இப்போது காதல் கதை எனக்கு வேண்டாம், கிரைம் கதை இருந்தால் சொல்லுங்கள்’ என்றார்.
சொன்னேன். பிடித்திருந்தது. அப்படித்தான் தொடங்கினோம். இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் ‘கண்ணை நம்பாதே’ என்று தலைப்பு வைத்தோம். எப்படி பொருந்துகிறது என்பது படம் பார்க்கும்போது புரியும். திரைக்கதை பரபரப்பாக இருக்கும். படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். எல்லோருக்குமே முக்கியத்துவம் இருக்கும். 80% கதை இரவில் நடக்கும். இரண்டாம் பாதி முழுவதும் ஓரே இரவில் நடப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. மார்ச் மாதம் படம் வெளியாகும்.
இவ்வாறு மு.மாறன் சொன்னார்.
இசை அமைப்பாளர் சித்துக்குமார், எடிட்டர் சான் லோகேஷ், ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன் உடன் இருந்தனர்.