Published : 16 Feb 2023 03:00 PM
Last Updated : 16 Feb 2023 03:00 PM

தனுஷின் வாத்தி படத்துக்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

சிவகங்கை: நடிகர் தனுஷ் நடிப்பில் பிப்.17-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள ‘வாத்தி’ திரைப்படத்துக்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப் பாண்டியன் கூறியதாவது: சமீபகாலமாக, ஆசிரியர்களை பொதுவெளியில் அவமதிக்கும் செயல் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் மாணவர்கள் ஆசிரியர்களை கேலி செய்வதோடு, வரம்புமீறிச் செயல்படுவதும் வாடிக்கையாகி விட்டது.

பிப்.17-ம் தேதி நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள திரைப்படத்துக்கு ‘வாத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்களை கேலிப் பொருளாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஆசிரியர்களின் தன்மான உணர்வைக் காயப்படுத்துவதாக உள்ளது. இந்த செயல் கண்டிக்கத்தக்கது. படத்தின் தயாரிப்பாளர் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். தமிழக அரசும் இவ்விஷயத்தில் தலையிட்டு உரிய தீர்வுகாண வேண்டும், என்று கூறினார்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் ரா.இளங்கோவன் கூறியதாவது: தமிழகத்தில் சமீபகாலமாக அரசு பள்ளி ஆசிரியர்களை இழிவு படுத்தும் வகையில் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்களை ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து கேலி செய்வது அதிகரித்து வருகிறது.

தற்போது நடிகர் தனுஷ் நடித்து வெளியாக உள்ள படத்துக்கு வாத்தி எனப் பெயர் வைத்து ஆசிரியர்களை கேலிப் பொருளாக்கி உள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக் கிறோம். இந்தப் பெயரை திரைப் பட தணிக்கைக் குழு எப்படி அனு மதித்தது.? வாத்தி என ஆசிரியர்களை அழைப்பது தான் திராவிட மாடலா? நாங்கள் சட்டப் போராட்டம் நடத்த வேண்டுமா? இதனை தவிர்க்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x