Published : 06 Feb 2023 04:59 PM
Last Updated : 06 Feb 2023 04:59 PM

“அனைவருக்கும் திருப்தி தரும் படைப்பு என்று ஒன்று இல்லை” - ரஞ்சித் ஜெயக்கொடி

“அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்று ஒன்று இல்லை. ஒவ்வொருவருக்கும் ரசனையும் விருப்பத் தேர்வும் மாறுபடவே செய்யும்” என ‘மைக்கேல்’ படம் குறித்த விமர்சனங்களுக்கு இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

‘புரியாத புதிர்’, ‘இஸபெட் ராஜாவும், இதயராணியும்’ படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மைக்கேல்’. சந்தீப் கிஷன், திவ்யான்ஷா கௌசிக், விஜய்சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். படம் வெளியான 3 நாட்களில் ரூ.9.7 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களைப்பெற்றது.

இதனிடையே, படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியவை பாராட்டப்பட்டது. இந்நிலையில், படத்தின் மீதான விமர்சனங்களுக்கு இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “நன்றி உங்கள் கருத்துகளுக்கு எனது அன்பு. எனது எல்லாப் படைப்புகளையும் போலவே ‘மைக்கேல்’ திரைப்படமும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்றுதான். அதற்கும் என் 100% உழைப்பையே கொடுத்திருக்கிறேன்.

அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. ஒவ்வொருவருக்கும் ரசனையும் விருப்பத்தேர்வும் மாறுபடவே செய்யும். மைக்கேல்-ஐ ரசித்தவர்களுக்கு நன்றி; மாறுபட்ட கருத்துக் கொண்ட ரசிகர்களுக்கு, அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைத்து கருத்துக்களையும் மதிக்கிறேன். ஆகப்பெரும் வாஞ்சையுடன் ரஞ்சித் ஜெயக்கொடி” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x