

சென்னையிலுள்ள ராணுவ முகாமில் 'விஸ்வரூபம் 2' படத்தின் சில முக்கிய காட்சிகளை படமாக்க கமல் திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் 'விஸ்வரூபம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. 'விஸ்வரூபம்' வெளியான உடனே, 'விஸ்வரூபம் 2' படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடைபெற்றது.
அப்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஆனால், படத்திற்கான பணிகள் தாமதம் ஆனது. தற்போது ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து உரிமையை திரும்ப பெற்றார் கமல்ஹாசன்.
இதனால் படத்தின் டப்பிங் உள்ளிட்ட இதர இறுதிகட்ட பணிகள் உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 15 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது.
இதில் சில முக்கிய காட்சிகளை சென்னையிலுள்ள ராணுவ முகாமுக்குள் படமாக்க பிரத்யேக அனுமதி வாங்கியுள்ளார்கள். இதற்கு முன்பாக '2.0' படத்தின் படப்பிடிப்பு மட்டுமே இங்கு நடைபெற்றுள்ளது.
ராணுவ முகாம் படப்பிடிப்பைத் தொடர்ந்து, சில முக்கிய காட்சிகளை சென்னையிலுள்ள ஸ்டூடியோவில் சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, வெளியீட்டிற்கான பணிகள் துவங்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்தனர். இந்தாண்டு இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
'விஸ்வரூபம் 2' முடித்துவிட்டு, 'சபாஷ் நாயுடு' பணிகளை கமல் துவங்கவுள்ளார். மேலும், தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளார்