

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 67’ படத்தின் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய்யின் ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் கைகோக்கிறார். ‘விஜய் 67’ என அழைக்கப்படும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. கடந்த ஜனவரி 2-ஆம் தேதி இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது.
படத்தின் தொழில்நுட்ப குழுவினர் அறிவிக்கப்பட்ட நிலையில், யார் யார் நடிக்கிறார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், தற்போது படத்தில் சஞ்சய் தத் நடிக்க உள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸின் ட்விட்டர் பக்கத்தில், “தமிழ் சினிமாவுக்கு சஞ்சய் தத்தை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அவர் ‘விஜய் 67’ படத்தில் நடிக்க உள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், “விஜய் 67 படத்தின் ஒன்லைனைக் கேட்டபோதே நான் படத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டேன். இந்தப் பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என சஞ்சய் தத் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.