

ரஜினியை வைத்து ராஜமெளலி படம் இயக்கினால் எப்படியிருக்கும் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்திய அளவில் முதல் நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளையும் சேர்ந்து, பங்கு தொகை போக 121 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. 3 நாட்களில் சுமார் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது.
'பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள். மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநராக அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், "ரஜினியை வைத்து ராஜமெளலி ஒரு படம் இயக்குவார் என நம்புகிறேன். அப்படி நடைபெற்றால், 'அவதார்' படத்தின் உலகளாவிய வசூல் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தான் இயக்கவுள்ள தமிழ் படத்தின் முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.