Published : 29 Jan 2023 06:19 AM
Last Updated : 29 Jan 2023 06:19 AM

‘நான் இந்த இடத்துக்கு வந்ததே ஆசிர்வாதம்தான்’ - ‘ரன் பேபி ரன்’ ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘ரன் பேபி ரன்’ பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ம்ருதி வெங்கட் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜியிடம் பேசினோம்.

சினிமாவுக்கு வந்து 10 வருஷமாச்சே?

ஆமா. ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்துல காமெடியனா நடிக்க ஆரம்பிச்சேன். ‘எல்.கே.ஜி’ மூலம் நாயகனா ஆனேன். அந்தப் படத்தைத் ஆரம்பிக்கும்போது, முதல்ல அரசியல், அடுத்து ஆன்மிகம், அடுத்தது பொருளாதாரம், அடுத்து கல்வி பற்றி ‘3 இடியட்ஸ்’ மாதிரி படங்கள் பண்ணலாம்னு நினைச்சேன். அப்பதான் இந்தக் கதை வந்தது. பிடிச்சிருந்தது. உடனே ஒத்துக்கிட்டேன். இது த்ரில்லர் படம். சீட் நுனியில உட்கார வைக்கிற த்ரில்லர்னு சொல்லலாம். கடைசி 15 நிமிடம் வரை யாராலயும் யூகிக்க முடியாத திரைக்கதை இருக்கு. கண்டிப்பா ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்னு நம்பறேன்.

ஆர்.ஜே.பாலாஜின்னா காமெடி இமேஜ் இருக்கு. இதுலயும் அப்படித்தானா?

அப்படி தொடரக் கூடாதுன்னு நினைக்கிறேன். ஹீரோவா என்னை ரசிகர்கள் ஏத்துக்கிட்டாங்க. இவர் படம் இப்படித்தான் இருக்கும் அப்படிங்கற எண்ணம் வந்துடறதுக்கு முன்னால, என்னை நான் மாத்திக்கணும்னு நினைச்சேன். வெவ்வேறு ஜானர்ல படம் பண்ண ஆசைப்பட்டேன். இந்தக் கதை சரியான நேரத்துல அமைஞ்சது. இதுல காமெடி அதிகம் இருக்காது. ஆனா, ‘என்ட்ர்டெயின்’ பண்ணும். அதிகம் பேசாம நடிச்சிருக்கேன்.

பேருக்கு பின்னால பட்டம் போட்டுக்கிற ஆர்வம் இல்லையா?

நானே அதை கலாய்ப்பேன். எனக்கு எதுக்கு அதெல்லாம்? சாதாரண பார்வையாளன் அதையெல்லாம் பார்த்தா சிரிக்கத்தானே செய்வான். எங்க வீட்டுலயே அதை ஏத்துக்க மாட்டாங்க. பெரிய ஹீரோக்களுக்கு மக்கள் பட்டம் கொடுக்கும்போது, அது ஏற்றுக்கொள்ளப்படுது. தானே போட்டுக்கும்போது, அதை கிண்டல் பண்ற மாதிரிதான் பார்க்கத் தோணும். அதனால அதுல உடன்பாடு இல்லை.

நடிகர் விஜய்க்கு கதை சொன்னீங்களே?

போன வருஷம் ஜன. 27- ம் தேதி 40 நிமிஷம் கதை சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. ‘எப்ப ஷூட்டிங் போகலாம், ஏப்ரல்ல போகலாமா?’ன்னு கேட்டார். எந்த ஏப்ரல்னு கேட்டேன். வர்ற ஏப்ரல்னு (2022) சொன்னார். நான் என்ன சொன்னேன்னா, ‘சார் இப்ப தமிழ், தெலுங்குல ஒரு படம் பண்றீங்க. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல நடிக்கிறீங்க. அதுக்குப் பிறகு இதை பண்ணலாம்னு நினைச்சு வந்தேன். இந்தக் கதையை ரெடி பண்ண ஒரு வருஷம் டைம் வேணும்’னு சொன்னேன். அவர் உடனேஷூட் போகணுங்கறதுக்காகத்தான் கேட்டார். அவ்வளவுதான். அந்த பேச்சுவார்த்தை முடிஞ்சுபோச்சு. அப்புறம் நான் என் நடிப்பைத் தொடங்கிட்டேன். திரும்பவும் நல்ல ஐடியா வந்ததுன்னா அவர்ட்ட சொல்வேன்.

யாரை போட்டியா நினைக்கிறீங்க?

நான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறதே எனக்கான ஆசிர்வாதம் தான். நான் சினிமாவுக்கு முயற்சியே பண்ணலை. நான் என் வேலையை ரேடியோவுல நேர்மையா பண்ணினேன். அதுக்கு கிடைச்ச போனஸ்தான் இதெல்லாம். கிடைச்சிருக்கிற இந்த இடத்தை சரியா தக்க வைக்கணும்னு நினைக்கிறேன். அதனால எனக்கு யாரும் போட்டியில்லை. நான் ஒரு ஓரமா ஓடறேன். அந்த ஓட்டத்தை நீண்ட நாளா தொடரணுங்கறது என் ஆசை.

தவறவிடாதீர்!


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x