

மன வளர்ச்சிக் குன்றிய பாலசுப்ரமணியை (வினோத் கிஷன்) வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, அலுவலகம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் அவர் அம்மா (ரோகிணி). இந்நிலையில் ஐடி ஊழியரான நித்யாவை (கவுரிகிஷன்) ஒரு கும்பல் கடத்தி ஓர் அறையில் அடைத்து வைக்கிறது.
மயக்கம் தெளிந்து பார்க்கும் நித்யாவுக்கு அங்கு பட்டன்கள் செயல்படாத, பழைய செல்போன் ஒன்று கிடைக்கிறது. ஒரு வழியாக, அது பாலசுப்பிரமணியின் ‘லேண்ட்லைன்’ நம்பருக்கு செல்கிறது. மனவளர்ச்சிக்குன்றிய அவரால், கடத்தப்பட்ட நித்யாவுக்கு உதவ முடிந்ததா? நித்யா ஏன் கடத்தப்பட்டார் என்பதற்கு பரபர விடை சொல்கிறது படம்.
ஆசியாவின் முதல் ‘ஸ்பிளிட் ஸ்கிரீன்’படம் என்கிற பெருமையுடன் வந்திருக்கிறது ‘பிகினிங்’. ஒரே திரையில், இரண்டு கதைகள் என்கிற, ஐடியா, இந்த எளிமையானக் கதைக்குச் சரியாகப் பொருந்துகிறது. 2 சம்பவங்கள் இறுதியில் ஒரே இடத்தில் முடிவதுதான் கதை என்றாலும் அதைத் தெளிவான திரை எழுத்தால் கையாண்ட இயக்குநர் ஜெகன் விஜயாவை பாராட்டலாம்.
‘டைட்டில் கார்ட்’டில் இருந்தே தொடங்கிவிடும் கதை, இறுதிவரை பார்வையாளர்களை இழுத்து அமர வைத்து விடுவது படத்தின் பலம். அதற்கு, வினோத் கிஷனின் ஆச்சரியப்படுத்தும் நடிப்பு, பிரவீன் குமாரின் எடிட்டிங், வீரகுமாரின் ஒளிப்பதிவு, சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை ஆகியவை மொத்தமாகத் தாங்கிப் பிடித்திருக்கிறது.
‘ஸ்பெஷல் சைல்ட்’டின் உடல் மொழி, குழந்தைத் தனமானப் பேச்சு, ஒரே வார்த்தையைத் திரும்ப திரும்பச் சொல்லும் இயல்பு, கார்ட்டூன் சேனல் கண்டு மகிழும் மனம், ஒரு பெண் கடத்தப்பட்டிருப்பதின் தீவிரம் புரியாமல் கேட்கும் கேள்வி என விருதுக்கான நடிப்பை வழங்கி வியக்க வைக்கிறார் வினோத் கிஷன்.
ஒருபுறம் இவர் என்றால், மறுபுறத் திரையில் கவுரி கிஷனின் கதைவிரிகிறது. அறைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கிறத் தவிப்பையும்இயலாமையையும் வெளிப்படுத்துவதில் கவுரியின் நடிப்புக்கு நல்லதீனி. மனவளர்ச்சிக் குன்றிய மகனை வைத்துக்கொண்டு,வேலைக்குச் செல்லும் ‘சிங்கிள் மதரி’ன் வேதனையை யதார்த்தமாக வெளிப்படுத்துகிறார் ரோகிணி. கவுரியை கடத்தும் சச்சின், அவர் நண்பர்கள் மகேந்திரன், சுருளி, காதலன் லகுபரன் ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
கவுரி கிஷன், தான் கடத்தப்பட்டிருப்பதை வினோத்திடம் ஃபோனில்புரிய வைக்கும் இடம் சுவாரஸ்யம் என்றாலும் அதன் நீளம் கொஞ்சம் போரடிக்கவைக்கிறது. ஒரு பெண்ணை கடத்தியவர்கள் பதட்டமே இல்லாமல், சிரித்துக் கொண்டு, ஜாலியாக வெளியேபோவதும் வருவதுமான காட்சிகள், கதையின் ‘சீரியஸ்’ தன்மையை குறைக்கிறது. இது போன்ற குறைகள் இருந்தாலும் ‘பிகினிங்’, புதிய முயற்சிகளுக்கான நல்ல தொடக்கமாகவே இருக்கிறது.