“ரசிகர்களிடம் வீடியோ கால் மூலம் பேசுவார்” - விஜய் ஆண்டனி குறித்து சுசீந்திரன்

“ரசிகர்களிடம் வீடியோ கால் மூலம் பேசுவார்” - விஜய் ஆண்டனி குறித்து சுசீந்திரன்
Updated on
1 min read

“விஜய் ஆண்டனி விரைவில் தனது ரசிகர்களிடம் வீடியோ கால் மூலமாக பேசுவார். யாரும் பயப்பட வேண்டாம்; வதந்திகளை நம்ப வேண்டாம்” என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி, ‘பிச்சைக்காரன் 2’ படத்தைத் தயாரித்து, இசை அமைத்து, நடித்து வருகிறார். இந்தப் படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். அவர் ஜோடியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான, பாடல் காட்சி லங்காவி தீவில் நடந்து வந்தது. கடலுக்குள் செலுத்தும் ‘ஜெட் ஸ்கை’ எனப்படும் பைக்கில் விஜய் ஆண்டனியும் காவ்யா தாப்பரும் செல்வதுபோல படமாக்கப்பட்டது.

அப்போது, எதிர்பாராத விதமாக மற்றொரு, ‘ஜெட் ஸ்கை’ வாகனத்தின்மீது, விஜய் ஆண்டனியின் வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் விஜய் ஆண்டனியின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் உதடு, பற்களில் பலத்த காயம் ஏற்பட்டன. காவ்யா தாப்பர் காயமின்றி தப்பினார். உடனடியாக படக்குழுவினர், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு விரைவில் சென்னை திரும்புவார் என கூறப்பட்டது.

இந்நிலையில், விஜய் ஆண்டனியின் உடல்நலம் குறித்து தகவல் தெரிவித்துள்ள இயக்குநர் சுசீந்திரன், “பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பில் காயமடைந்த விஜய் ஆண்டனி 2 நாட்களுக்கு முன்பே சென்னையில் உள்ள அவர் வீட்டிற்கு வந்துவிட்டார். 2 வாரம் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். விரைவில் அவர் ரசிகர்களிடம் வீடியோ கால் மூலமாக பேசுவார். யாரும் பயப்பட வேண்டாம்; தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in