வம்சி ஆதங்கம் முதல் ‘ஏகே 62’ அப்டேட் வரை: திரைத் துறை தெறிப்புகள் @ ஜன.16, 2023

வம்சி ஆதங்கம் முதல் ‘ஏகே 62’ அப்டேட் வரை: திரைத் துறை தெறிப்புகள் @ ஜன.16, 2023
Updated on
3 min read

புதிய படங்களின் ஓடிடி உரிமை பெற்ற நெட்ஃப்ளிக்ஸ்: ஏகே 62: ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிதுள்ள ‘துணிவு’ திரைப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘ஏகே 62’ படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதை அந்நிறுவனமே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறைவன்: 'வாமனன், 'என்றென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் 'இறைவன்'. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது.

சந்திரமுகி 2: கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'சந்திரமுகி' பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை பி.வாசு இயக்குகிறார். லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு வெற்றி விழாவில் பேசிய வம்சி: ‘வாரிசு’ வெற்றி விழாவில் இயக்குநர் வம்சி, “மறைந்த கலை இயக்குநர் சுனில் பாபுவுக்கு இந்தப் படத்தின் வெற்றியை சமர்ப்பிக்கிறேன். விஜய், தில்ராஜு மற்றும் படக்குழு என் மீது வைத்த நம்பிக்கைதான் இந்தப் படம். அந்த நம்பிக்கையை நிஜமாக்கிய தமிழ் மக்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜய்யிடம் இந்தக் கதை சொல்லும்போது, ‘நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்’ என சொன்னேன். என்னை பலரும் தெலுங்கு இயக்குநர், தெலுங்கு இயக்குநர் என கூறுவது காயப்படுத்துகிறது. நான் தமிழ், தெலுங்கு ஆள் இல்லை. முதலில் நான் ஒரு மனிதன். பார்வையாளர்களின் வரவேற்பின் மூலம் என்னைச் சுற்றி வரையப்பட்டிருக்கும் அனைத்து எல்லைகளையும் கடக்க முயலும் மனிதன். மனதில் எனக்கு சிறிய இடமளித்த தமிழ் மக்களுக்கு நன்றி.

‘இது பக்கா தமிழ் படம்’ என்பதைத்தான் நான் முதலிலிருந்து கூறி வருகிறேன். விஜய் குறித்து நான் எவ்வளவு சொன்னாலும் போதாது. அவரிடம் ‘சார் நீங்கள் ஹேப்பியா?’ என கேட்டேன். அவர் ‘ஹேப்பி’ என்றார். அது போதும் எனக்கு. என் மீது நம்பிக்கை வைத்து இப்படம் கொடுத்ததற்கு நன்றி விஜய். என் தந்தை படம் பார்த்து கண்ணீர்விட்டார். அது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம்” என்றார்.

ஜேம்ஸ் கேமரூன் குறித்து ராஜமவுலி: ‘டைட்டானிக்’, ‘அவதார்’ படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைப் பார்த்து பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவருடனான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ பட இயக்குநர் ராஜமவுலி, “‘ஆர்ஆர்ஆர்’ படத்தைப் பார்த்த ஜேம்ஸ் கேமரூனுக்கு படம் மிகவும் பிடித்து போனதால், அவர் தனது மனைவி சூசியிடம் படத்தைப் பார்க்குமாறு பரிந்துரைத்துள்ளார்.பின்னர் மனைவியுடன் இணைந்து மீண்டும் ஒருமுறை படத்தைப் பார்த்திருக்கிறார். படம் குறித்து நீங்கள் உரையாடிய அந்த 10 நிமிடங்களை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நீங்கள் சொன்னது போல நான் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறேன். இருவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து வெற்றி பெற்ற படம், ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. அண்மையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீரசிம்ஹா ரெட்டி, வால்டர் வீர்ய்யா வசூல் நிலவரம்: இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. சங்கராந்தி பண்டிகையையொட்டி இப்படம் கடந்த ஜனவரி-12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தில் ஷ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார், ஹனிரோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.தமன் இசையமைத்திருந்த இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. முழுக்க முழுக்க மாஸ் ஆக்‌ஷனை அடிப்படையாக கொண்டு ரூ.110 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், திரையரங்குகளில் வெளியான 4 நாட்களில் ரூ.104 கோடியை வசூலித்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இயக்குநர் பாபி கோலி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் ‘வால்டர் வீரய்யா’. ரவிதேஜா, பாபி சிம்ஹா, ஸ்ருதி ஹாசன், பிரகாஷ்ராஜ், சத்யராஜ், நாசர், கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படம் ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 3 நாட்களில் ரூ.108 கோடியை வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் நாள் இப்படம் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், படம் உலக அளவில் 5 நாட்களில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ‘வாரிசு’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் வம்சியும், தயாரிப்பாளர் தில் ராஜுவும் உருக்கமாக பேசினர். அதன் விவரம்: ‘‘தெலுங்கு இயக்குநர் எனக் கூறுவது என்னைக் காயப்படுத்துகிறது” - ‘வாரிசு’ வெற்றி விழாவில் வம்சி

பாலகிருஷ்ணாவின் நெகிழ்ச்சி செயல்: ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவரது அறுவை சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்திருந்தனர். பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் மாணவியின் குடும்பம் குறிப்பிட்ட தொகையை ஏற்பாடு செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அந்த மாணவிக்கு உதவ முன்வந்துள்ளார். மாணவியின் மருத்துவ செலவுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ள அவர், மேல் சிகிச்சைக்கான செலவுகளையும் ஏற்கொள்கிறேன் என உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலகிருஷ்ணாவின் இந்தச் செயலால் அவரது ரசிகர்கள் நெகிழ்ந்துள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in