ரிவால்வர் ரீடா - வித்தியாசமான போஸ்டரில் கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீடா’ படத்தின் வித்தியாசமான முதல் பார்வை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’, ‘சர்காரு வாரி பாட்டா’, ‘வாஷி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதில் ‘சாணிக் காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பில் பாராட்டப்பட்டது. இதையடுத்து தெலுங்கில் நானியுடன் ‘தசரா’ படத்திலும், தமிழில் ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதியுடனும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவரது நடிப்பில் இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளன.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக நடிக்கும் படம் ‘ரிவால்வர் ரீடா’. இயக்குநர் சந்துரு இயக்கும் இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். தற்போது இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. முதல் பார்வையை நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
