

'கத்தி சண்டை' படத்தை விளம்பரப்படுத்தும் பேட்டியில் நடிகைகளின் உடைகள் குறித்து இயக்குநர் சுராஜின் சர்ச்சையான கருத்துகளுக்கு நயன்தாரா காட்டமாக பதில் தெரிவித்துள்ளார்.
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கத்தி சண்டை'. கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. மேலும், வசூலிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
'கத்தி சண்டை' படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அப்படத்தின் இயக்குநர் சுராஜ் அளித்துள்ள பேட்டியில், "நாயகி முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்து திரையரங்கில் படம் பார்க்கும் போது, தமன்னாவை கிளாமராக பார்க்கத் தான் ரசிகர்கள் விரும்புவார்கள். நடிக்க வேண்டும் என்றால் அதுக்கு தனியாகதான் படம் பண்ண வேண்டும். கிளாமராக செய்பவர்கள்தான் இன்று பெரிய நாயகியாக இருக்கிறார்கள்.
பசங்க படம் பார்க்கும் போது சந்தோஷமடைய வேண்டும். ஆடை வடிவமைப்பாளர் எல்லாம் முட்டி வரை மூடி உடை எடுத்து வருவார். இதெல்லாம் கட் பண்ணிடுடா, ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குறாங்க, நடிக்க சொல்லுடா என்று சொல்வேன்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சுராஜ்.
இக்கருத்துகளுக்கு அவரை பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கி இருக்கிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் சுராஜ் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் சுராஜின் கருத்துகளுக்கு நடிகை நயன்தாரா, "திரைத்துறையைச் சேர்ந்த ஒரு பொறுப்புள்ள நபர் எப்படி இவ்வாறான கீழ்த்தரமான, மலிவான கருத்தை தெரிவிக்க முடியும்? நடிகைகளுக்கு எதிராக தரக்குறைவாக பேச சுராஜ் யார்? பணம் கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நடிகைகள் ஆடைகளைக் களைந்து விடுவதாக அவர் நினைக்கிறாரா? நடிகைகளை ஆடை களைபவர்கள் என்பதாக மட்டுமே அவர் பார்க்கிறாரா? அவர் தன் குடும்பத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றி இவ்வாறு தைரியமாக கூறிவிட முடியுமா என்ன?
‘பிங்க்’, 'தங்கல்’ போன்ற திரைப்படங்கள் பெண்கள் அதிகாரத்தையும், பெண்களுக்கான மரியாதையையும் பேசும் காலகட்டத்தில் இந்த சுராஜ் எந்த காலத்தைச் சேர்ந்தவர்? நடிகைகள் கவர்ச்சி உடைகளை அவர்களுக்கு சவுகரியமாக இருக்கும் போதும் கதைக்குத் தேவைப்பட்டால் மட்டுமே அணிந்து கொள்கின்றனர். நடிகைகளை கவர்ச்சிப் பொம்மைகளாக பார்க்கவே பணம் செலவழித்து திரைப்படத்திற்கு வருவதாக அவர் எந்த ரசிகர்களை மனதில் கொண்டு கூறுகிறார்?
ஆடைகளைக் களையவே பெண்கள் பணம் பெற்றுக்கொண்டு நடிக்கின்றனர் என்ற கருத்துகளை கூறுவதன் மூலம் சினிமாவில் இதுதான் நடக்கிறது என்பதாக இளைஞர்கள் நினைக்குமாறு சுராஜ் தவறாக வழிநடத்துகிறார்.
நானும் வர்த்தக சினிமாவில் கவர்ச்சியாக நடித்துள்ளேன் ஆனால் சில ‘கீழ்நிலை ரசிகர்களை’ திருப்திப் படுத்துவதற்காக எனது இயக்குநர் அவ்வாறு நடிக்குமாறு கூறவில்லை மாறாக அது எனது தெரிவாக இருந்தால் மட்டுமே அவ்வாறு நடிப்போம். நடிகைகள் என்றால் ‘இப்படித்தான்’ என்று நினைக்க யாருக்கும் உரிமை கிடையாது" என்று தெரிவித்துள்ளார் நயன்தாரா.
வீடியோ பேட்டியில் சுராஜ் தெரிவித்த கருத்துகளை காண: