ரஜினியும்கூட அவமானங்களை சந்தித்திருப்பார்: கஸ்தூரிராஜா

ரஜினியும்கூட அவமானங்களை சந்தித்திருப்பார்: கஸ்தூரிராஜா
Updated on
2 min read

திரைத்துறையில் அறிமுக காலத்தில் அவமானங்களும் வலிகளும் போராட்டங்களும் இருக்கும். ரஜினியும் கூட இப்படிப்பட்ட அவமானங்களைக் கடந்துதான் உயர்ந்து வந்திருக்கிறார் என இயக்குநர் கஸ்தூரி ராஜா தெரிவித்தார்.

புதுமுகங்கள் நடிக்க ஜெய்.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பார்க்க தோணுதே'. ஜி.ரமேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை வாசவி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கஸ்தூரிராஜா, ஒளிப்பதிவாளர் நட்ராஜ், ஜாக்குவார் தங்கம், இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் கஸ்தூரிராஜா பேசியது "இந்த மாதிரி சிறிய படங்கள் ஓடினால்தான் சினிமா நன்றாக இருக்கும். மேலும் 10 படங்கள் வரும். இது தான் சினிமா. எல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள்தான். என் மூத்தமகன் செல்வராகவன் என்னை ஏன் நாயகனாக்கவில்லை என்கிறான். தனுஷ் என்னை ஏன் நடிக்க விட்டே என்கிறான்.

இங்கு வந்துள்ள நட்டியிடம் நான் ஒரு கதை சொன்னேன், நடிக்க மறுத்துவிட்டார். இது பெரிய நாயகர்கள் செய்யவேண்டிய கதை எனக்குச் சரிப்பட்டு வராது என்றார். அவர் எடுத்த முடிவு சரியானது. சிலவற்றைச் சொல்ல சில முகம் தேவை. அதுதான் முகப் பொருத்தம் .அவர் 'சதுரங்க வேட்டை'யில் நன்றாக நடித்திருப்பார். அதுதான் அவரது முகப் பொருத்தம்.

நான் முதல்படம் இயக்கியபோது ராஜ்கிரண் பெரிய கதாநாயகர்களிடம் எல்லாம் என்னை அழைத்துச் சென்றார் .விஜயகாந்திடம் கதை சொன்னேன் மறுத்துவிட்டார். சத்யராஜிடம் கதை சொன்னேன் மறுத்துவிட்டார். அவர்களுக்கு என் மேல் நம்பிக்கை வரவில்லை. சத்யராஜ் இதெல்லாம் ஒரு கதையா என்றார். சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா, நான் இப்போதுதான் முழுக்கை சட்டையிலிருந்து அரைக்கைச் சட்டைக்கு வந்திருக்கிறேன் என்றார். பாரதிராஜா எடுக்கிறாரே என்றேன் அவர் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? என்றார். நான் புதுமுகம் என்பதால் யாரும் நம்பவில்லை.

இப்படிப் பலவற்றை கடந்துதான் முதல் படம் எடுத்தேன். எல்லா அறிமுகங்களும் இப்படிப்படட அவமானங்களும் வலிகளும் போராட்டங்களும் கடந்து தான் வந்திருக்கிறார்கள். ரஜினியும் கூட இப்படிப்பட்ட அவமானங்களைக் கடந்துதான் உயர்ந்து வந்திருக்கிறார்.

ஒரு படத்துக்கு தயாரிப்பாளர் அமைவது சிரமம்.இயக்குநர் என்ன வேண்டுமானாலும் கற்பனை செய்யலாம். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி இல்லாமல் படமெடுக்க முடியாது. அவ்வளவு பிரச்சினைகள் வரும். 'பார்க்க தோணுதே' என்கிற இந்தப் படத்தின் தலைப்பைப் பார்க்கும் போது எனக்கு நான் காதலித்த காலம் நினைவுக்கு வருகிறது. காதலில்லாதவன் கலைஞனே கிடையாது.

மதுரையில் 1974-ல் மெஜுரா கோட்ஸ் நிறுவனத்தில் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த போது இருந்த சுதந்திரமும் மகிழ்ச்சியும் நிம்மதியும் இப்போது இல்லை.

அப்போது முதல்மகன் செல்வா பிறந்தது, தனுஷ் பிறந்தது எல்லாமே சுதந்திரமும் மகிழ்ச்சியும் தந்தவை. இப்போது தனுஷை யாரோ ஒருவர் என் மகன் என்கிறார். எனக்கு எவ்வளவு பிரச்சினை பாருங்கள். இன்று வசதிகள் இருந்தும் சுதந்திரமும் இல்லை; மகிழ்ச்சியும் இல்லை.

இன்று சினிமா எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது. இன்று சினிமா சூதாட்டத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறது. 'துள்ளுவதோ இளமை'யில் நடித்தபோது, ப்ளஸ் ஒன் படித்த தனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை, ஈடுபாடில்லை. பைனான்சியர் பணம் கொடுத்துவிட்டு 'அப்பனும் புள்ளையும் கேமரா வச்சிட்டு விளையாடறாங்க' என்றார் கிண்டலாக. 'என் ராசாவின் மனசிலே' சமயத்தில் கூட என்னையும் ராஜ்கிரணையும் 'கோடம்பாக்கத்தில் ரெண்டு லூசுங்க சுத்துது' என்றார்கள்.

இப்படி எல்லாரும் அவமானங்களைத் தாண்டித்தான் வர வேண்டும். இந்த சிறிய தயாரிப்பாளர் வெற்றிபெற வேண்டும்" என்று பேசினார் இயக்குநர் கஸ்தூரிராஜா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in