

பாக்யராஜ் இடத்தை நிரப்ப வேறு எந்த இயக்குநரும் இதுவரை உருவாகவில்லை என்று இயக்குநர் ஷங்கர் புகழாரம் சூட்டினார்.
பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தை பார்த்திபன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் தன்னுடைய குருநாதர் பாக்யராஜுக்குப் பாராட்டு விழா என இரண்டு விழாக்களையும் ஒருசேர நடத்தினார் பார்த்திபன்.
இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா, ஷங்கர், கரு.பழனிப்பன், பிரபு, பி.வாசு, கார்த்திக் சுப்புராஜ், தரணி, லிங்குசாமி, விஷால் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் இதில் கலந்து கொண்டு இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இவ்விழாவினை சுஹாசினி மற்றும் ரோகிணி இருவரும் தொகுத்து வழங்கினார்கள்.
இவ்விழாவின் தொடக்கத்தில் பாக்யராஜின் குருவான பாரதிராஜாவுக்கு முதலில் மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாக்யராஜ் அமர்ந்திருந்த இருக்கைக்கு, மேகங்கள் கூடிவர பூமழை பொழிந்தது. மேலும், பூர்ணிமா பாக்யராஜை மேடைக்கு அழைத்து, அவரின் கையால் தங்ககாப்பு பரிசளிக்கப்பட்டது. ஒட்டுமொத்த உதவி இயக்குநர்களும் வெள்ளை உடையில் வந்திருக்க, அவர்களின் கையால் மரத்திலான பேனா பாக்யராஜுக்கு பரிசளிக்கப்பட்டது.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், "’அந்த ஏழுநாட்கள்’, ’முந்தானை முடிச்சு’ இறுதிக்காட்சிகள் பற்றி பல இடங்களில் பேசிவிட்டோம். ஆனால் இன்றும் திரைக்கதை என்றால் பாக்யராஜ் சார் தான். அவர் இடத்தை நிரப்ப, வேறு யாரும் இன்றுவரை வரவில்லை. பாக்யராஜ் மாதிரியே பார்த்திபனிடமும் அந்த மெனக்கெடல் இருக்கிறது. விழாவிற்கான பத்திரிகையிலிருந்து இந்த நிமிடம் வரையிலும் மெனக்கெட்டுகொண்டே இருக்கிறார்" என்று பேசினார்.
விஷால் பேசும் போது, "சினிமாவுக்காக நிறைய படிப்புகள் இருக்கிறது. ஆனால் பாக்யராஜ் மாதிரியான ஜாம்பவான்களின் படங்கள் தான் நமக்கான பாடம். புதுமுக இயக்குநர்களுக்கான சிறந்த வழிகாட்டி தான் பாக்யராஜ். முதல் பத்து வரிசையில் இருக்கும் கதாநாயகர்களின் வரிசையில் சாந்தனு இடம்பெறவேண்டும் என்பதே என்னுடைய நீண்ட நாள் ஆசை. அவருக்கான நேரம் இன்றிலிருந்து தொடங்கியிருக்கிறது. ஒரு அண்ணனாக அவன் கூட எப்போதுமே இருப்பேன். இதே நாள் போன வருடம், சென்னை வெள்ளத்தில் உண்மையான அவன் உழைப்பு எனக்கு மட்டுமே தெரியும்" என்று பேசினார்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், "எதுவுமே தெரியாமல் சினிமாவுக்குள் வந்தேன். கடைசி வரைக்கும் கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும் என்பதை மனதில் கொண்டவன். இசை வெளியீட்டு விழா என்று மட்டுமே அழைத்துவிட்டு, இந்தமாதிரியான நெகிழ்ச்சியான சம்பவத்தில் என்னை மாட்டிவிட்டுவிட்டார் பார்த்திபன். சிஷ்யனாக என் குருவிற்கு நான் எதுவும் செய்யவில்லை. அவருக்கு முதலில் நான் செய்திருக்கவேண்டும்.
இங்கு எனக்கு கிடைக்கும் அனைத்து மரியாதையுமே என் இயக்குநருக்கானது. அவரின் பாதத்தில் இதைக் காணிக்கையாக்குகிறேன். பெற்ற தந்தையாக, தன் பையனுக்கு நடக்கும் விழாவை கண்டு ரசிப்பது போலத் தான் என் இயக்குநரைப் பார்க்கிறேன். என்னுடைய தந்தையும் தாயுமாக இன்று எங்களை வாழ்த்தியிருக்கிறார் என் இயக்குநர்" என்று பேசினார்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, "பாக்யராஜ் நகைச்சுவையாக பேசியே ரசிகர்களை ஈர்த்துவிடுவார். வைரமுத்து பேசினால் சபையே இறுக்கமாகிவிடும். பார்த்திபன் பேசினாலே வித்தியாசமாக தான் இருக்கும். ஆனால் இந்த பாரதிராஜா பாமரன். உணர்ச்சிவசக்கூடியவன். இதனாலேயே இரண்டு வருடங்களாக பல நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவந்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சியைத் தவறவிட்டால், என் பிள்ளையை பாராட்ட வேறு மேடை கிடைக்காது. யாரிடம் பேசினாலும், “பாரதிராஜா” என்று என் பெயரைச் சொல்லாத ஒரே சிஷ்யன் பாக்கியராஜ். எங்க இயக்குநர் என்று மட்டுமே சொல்லுபவன். என்னிடம் பாக்கியராஜ் சேரும் போது நல்ல விதை என்று மட்டும் தான் அவனை நினைத்தேன். ஆனால் விதைக்குள் இவ்வளவு வீரியம் இருக்கும் என்பது எனக்கு தெரியாது" என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றையும் அறிவித்தார் இயக்குநர் பார்த்திபன். அவருடைய தயாரிப்பில் அடுத்து உருவாகும் படத்தை பாக்யராஜ் இயக்க சாந்தனு நாயகனாக நடிப்பார் என்று அறிவித்தார் பார்த்திபன்.