

நடிகைகளின் உடைகள் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு, மன்னிப்பு கோரியுள்ளார் இயக்குநர் சுராஜ்
'கத்தி சண்டை' படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அளித்துள்ள பேட்டியில், "நாயகி முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்து திரையரங்கில் படம் பார்க்கும் போது, தமன்னாவை கிளாமராக பார்க்கத் தான் விரும்புவார்கள்." என்று தெரிவித்தார் இயக்குநர் சுராஜ்.
சுராஜின் கருத்துக்கு நயன்தாரா மற்றும் தமன்னா இருவருமே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும், "சுராஜ் என்னிடம் மட்டுமன்றி ஒட்டுமொத்த திரையுலக கதாநாயகிகளிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்" என்று தமன்னா கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் சுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமன்னா உட்பட திரையுலகின் அனைத்து கதாநாயகிகளிடமும் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். யாரையும் தவறான நோக்கில் சித்தரிப்பதும், அவர்களது நம்பிக்கைகளை காயப்படுத்துவதும் எனது நோக்கமல்ல. மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். எனது வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
சுராஜ் மன்னிப்புக் கோரியுள்ளதால், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது.