Published : 01 Jan 2023 06:39 PM
Last Updated : 01 Jan 2023 06:39 PM
ஆன்லைன் மீடியாவில் பணியாற்றும் தையல்நாயகி (த்ரிஷா)யின் அண்ணன் மகள் சுஷ்மிதா (அனஸ்வரா ராஜன்). இவர் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு ஒன்று இயக்கப்படுகிறது. அதில் இருந்து சுஷ்மிதாவை மீட்க நினைக்கும் தையல்நாயகி, அந்த போலி கணக்கின் மூலம் லிபியாவைச் சேர்ந்த தீவிரவாதி ஆலிமுடன் உரையாடத் தொடங்குகிறாள். சுஷ்மிதா என்று நினைத்து அவனும் பேசிக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து அந்நாட்டின் எண்ணெய் வளத்தை சூறையாட விரும்பும் வல்லரசு நாடுகளின் முகவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் தையல்நாயகியும் சுஷ்மிதாவும் பகடைக்காய் ஆக்கப்படுகிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? ஆலிம் யார்? என்ற கேள்விகளுக்குவிடை சொல்கிறது மீதிக் கதை.
சமூக ஊடகங்களின் மூலம் இளம்பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் சர்வதேச எண்ணெய் வள அரசியலையும் தொடர்புபடுத்தி சுவாரசியமான கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அதற்கு கச்சிதமான இரண்டு மணி நேரத் திரைக்கதையை அமைத்து ஆங்காங்கே மிகக் கூர்மையான வசனங்களையும் எழுதி இயக்கியிருக்கிறார் எம்.சரவணன். சுயசார்பும் சுதந்திர சிந்தனையும் தெளிவான சமூக அரசியல் பார்வையையும் கொண்ட நாயகியை மையப்படுத்தி இருப்பதும் மனதைக் கவர்கிறது.
முதல் பாதியில் பத்திரிகைத் துறைபற்றியும் பெண்கள் பற்றியும் தையல்நாயகி பேசும் பெரும்பாலான வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. தன் அண்ணன் மகள் தொடர்பான ஃபேஸ்புக் சர்ச்சையை கையாளும் விதமும் முதிர்ச்சியான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. ஆலிம், தீவிரவாதி என்று தெரிந்தாலும் ஆயுதமேந்திய பின்னணியையும் ஆதரவற்ற நிலையில் அன்புக்காக ஏங்குவதையும் புரிந்துகொண்டு அவன் மீது தையல்நாயகி பரிவுகொள்வதும் ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்வதும் அழகானத் திருப்பங்கள்.
சர்வதேச எண்ணெய் வணிகம், அதனால் ஆப்ரிக்க, இஸ்லாமிய நாடுகளில் ஏற்படும் பிரச்சனைகளை முன்வைத்து சர்வதேச அரசியல் தொடர்பான நிறைய வசனங்கள் பேசப்படுகின்றன. ஆனால் நாடுகளின் பெயர்கள் சென்சாரில் நீக்கப்பட்டுவிட்டதால் இந்த வசனங்கள் உரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன.
திரைக்கதையில் நிறைந்திருக்கும் லாஜிக் பிழைகளும் படத்தின் நல்ல நோக்கங்களை நீர்த்துப்போகச் செய்கின்றன. தீவிரவாதியுடன் உரையாடிக் கொண்டிருந்த தையல்நாயகியை சிபிஐயும் சர்வதேச அதிகாரிகளும் கையாளும் விதம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.
இறுதியில் சர்வதேச அதிகாரிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதல் காட்சியும் உரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
த்ரிஷா முதிர்ச்சியான நடிப்பைத் தந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மெனக்கெட்டிருக்கிறார். தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் புரிந்துகொள்ள முடியாத அப்பாவியாக அனஸ்வரா ராஜன் அழகாக நடித்திருக்கிறார். தையல்நாயகி மீது உள்ளுக்குள் தேக்கிவைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் காட்சியில் அண்ணியாக நடித்திருக்கும் லிஸி கவனம் ஈர்க்கிறார். சத்யாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலுசேர்க்கிறது. சக்திவேலின் ஒளிப்பதிவும் சுபாரக்கின் படத்தொகுப்பும் கதையின் தன்மைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன.
லாஜிக் பிழைகளைச் சரி செய்திருந்தால் முழுமையாக ரசிக்க வைத்திருப்பாள் இந்த ‘ராங்கி’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT