

நடிகைகள் திறமைகளை வெளிப்படுத்த வருகிறார்களே தவிர தேகத்தைக் காட்ட அல்ல என்று விஷால் தெரிவித்துள்ளார்.
'கத்தி சண்டை' படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அளித்துள்ள பேட்டியில், "நாயகி முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்து திரையரங்கில் படம் பார்க்கும் போது, தமன்னாவை கிளாமராக பார்க்கத் தான் விரும்புவார்கள்." என்று தெரிவித்தார் இயக்குநர் சுராஜ்.
சுராஜின் கருத்துக்கு நயன்தாரா மற்றும் தமன்னா இருவருமே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும், "சுராஜ் என்னிடம் மட்டுமன்றி ஒட்டுமொத்த திரையுலக கதாநாயகிகளிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்" என்று தமன்னா கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில் 'கத்தி சண்டை' படத்தின் நாயகன் விஷால், "இயக்குநர் சுராஜிடமிருந்து வந்த முற்றிலும் தேவையில்லாத வார்த்தைகள் இவை. நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக மட்டும் இதை சொல்லவில்லை. ஒரு நடிகராக சொல்கிறேன். நடிகைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வருகிறார்களே தவிர தேகத்தைக் காட்ட அல்ல.
சுராஜ் மன்னிப்பு கோரியதில் மகிழ்ச்சி. இதனால் தமன்னாவுக்கு நேர்ந்த தேவையற்ற பாதிப்பு குறித்து வருத்தமடைகிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சுராஜ் மன்னிப்பு கோரியிருந்தாலும், பல்வேறு முன்னணி நாயகிகள் தங்களுடைய எதிர்ப்பைத் தொடர்ச்சியாக பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.