

“சினிமாவுல கடைசி வரைக்கும் எல்லோரையும் சிரிக்க வைக்கணும். அது மட்டும்தான் என் ஆசை. எனக்கு ரோல் மாடலே கிடையாது” என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார் .
விஷால், வடிவேலு, தமன்னா கூட்டணியில் உருவாகியுள்ள ‘கத்தி சண்டை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அப்போது நடிகர் வடிவேலு பேசியதாவது:
தமிழ்நாடே கொஞ்ச நாட்களா துன்பங்களையும் , துயரங்களையும் சந்திச்சுக்கிட்டு இருக்கு. இதையெல்லாம் பார்க்கவே சங்கடமா இருக்குண்ணே. அதனாலதான் நாங்க ‘கத்தி சண்டை’ படத்தைக்கூட கொஞ்ச நாட்கள் கழிச்சு ரிலீஸ் பண்ணலாம்னு தள்ளி வச்சோம். எனக்கு ரோல் மாடல்னு யாருமே கிடையாது. சினிமாவுல கடைசி வரைக்கும் எல்லாரையும் சிரிக்க வைக்கணும்ணே. அது மட்டும்தான் என்னோட ஆசை. அதனாலதான் நடிக்கிற ஒவ்வொரு படத்துலயும் நல்ல காமெடி காட்சிங்க இருக்குற மாதிரி தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.
நம்மளை நம்பி வர்ற மக்களை ஏமாத்திடக்கூடாது. இடையில ‘லிங்கா’ படத்துக்குக்கூட கூப்பிட்டாங்க. காமெடி காட்சிங்க கம்மியா இருக்குன்னு வேண்டாம்னு மறுத்துட்டேன். நடிக்கிற ஒவ்வொரு படத்துலயும் வித்தியாசம் காட்டணும். அதுக்குத்தான் மீசை, விக்குன்னு அப்பப்போ மாத்திக்கிட்டே இருக்கேன். நடிகர் சங்கம் எப்பவும் ஒற்றுமையா இருக்கணும்னுதான் தேர்தல் சமயத்துல விஷால் அணிக்கு ஆதரவு தெரிவிச்சேன். அவர்கிட்ட பொய் இல்லை. இப்ப உள்ள நிர்வாகிங்க, எல்லா பிரச்சினையையும் ஒவ்வொண்ணா பார்த்து சரி பண்ணிக்கிட்டு வர்றாங்க. எப்படியோ அரை கிணறு தாண்டிட்டோம். இனிமே சங்கத்துல நடக்குற எல்லா விஷயத்துலயும் வெற்றி இருக்கும். இவ்வாறு வடிவேலு கூறினார்.