

தமிழ் சினிமாவில் 2016-ஐ பொறுத்தவரையில், தங்களின் வர்த்தகத்துக்கு உறுதுணைபுரிந்த நாயகன் சிவகார்த்திகேயன் தான் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
2015-ம் ஆண்டு பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, தயாரிப்பு நிறுவனத்திக்கு ஏற்பட்ட பொருள் நெருக்கடியால் தள்ளிவைக்கப்பட்ட படம் 'ரஜினி முருகன்'. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம் பொங்கல் 2016-ல் வெளியானது. 'தாரை தப்பட்டை', 'கெத்து' உள்ளிட்ட படங்களோடு வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு, எதிர்பார்ப்புகள் அதிகமானதால் அதிகமான திரையரங்குகளில் வெளியானது 'ரஜினிமுருகன்'.
2016-ம் ஆண்டில் விநியோகஸ்தர்களுக்கு பெரும் லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த முதல் படமாக 'ரஜினிமுருகன்' திகழ்ந்தது. அப்படத்தின் வசூல் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 'ரெமோ' படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன்.
படப்பிடிப்பு முடிந்து, அப்படம் பற்றிய போஸ்டர், படத்தின் பெயர், பாடல் வெளியீடு என ஒவ்வொன்றையும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டது படக்குழு. தமிழ் திரையுலகில் முதன்முறையாக தமிழகத்தின் ஒவ்வொரு விநியோக ஏரியாவையும் யார் வாங்கியுள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது தயாரிப்பு நிறுவனம்.
விஜய் சேதுபதி நடித்து 6 படங்கள் வெளியானாலும், அவருக்கான இடம் என்பது விமர்சன ரீதியில் மட்டுமே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் நடித்த படங்களில் சேதுபதி, தர்மதுரை ஆகியவை வர்த்தக ரீதியில் ஓரளவு லாபம் ஈட்டித் தந்ததாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் ஆகியோர் நடிப்பில் தலா ஒரு படமே வெளியானது. அஜித், கமல் படங்கள் வெளியாகவில்லை. இந்தச் சூழலில் சிவகார்த்திகேயன் நடித்த இரண்டு படங்களுமே தங்களுக்குப் பெரிய லாபம் தந்ததால், தங்கள் வர்த்தகத்துக்கு உறுதுணைபுரிந்தவராக அவரையே டிக் செய்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
"'ரஜினி முருகன்' எங்களுக்கு பெரிய அளவில் லாபம் ஈட்டித் தந்தது. பெரும் எதிர்பார்ப்புகிடையே வெளியான 'ரெமோ'வும் எங்களை ஏமாற்றவில்லை. விமர்சன ரீதியில் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், அந்தப் படம் நல்ல வசூல்தான். இதனால் ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் வரிசையில் வைத்தே சிவகார்த்திகேயனைப் பார்க்கிறோம்" என்றார் ஒரு முக்கிய விநியோகஸ்தர்.
தற்போது ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு அளிக்கப்படும் தொகைக்கு நிகராக சிவகார்த்திகேயன் படத்துக்கும் அளிக்க விநியோகஸ்தர்கள் முன்வந்துள்ளார்கள்.
2017-ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் வெளியாக இருக்கிறது. இப்படத்துக்கும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.