

“இன்னைக்கு விஞ்ஞான வளர்ச்சி கிராமத்துக்குள்ள ஈஸியா வந்துடுச்சு. ஊர்ப்பக்கம் ஷூட்டிங் போறோம்னாக்கூட இப்பல்லாம் யாரும் ஆட்டோகிராஃப் கேட்டு ஓடி வர்றதில்லை. ‘சார் ஒரு செல்பி’ன்னுதான் கிட்டே வர்றாங்க. இந்த மாதிரி ட்விட்டர், ஃபேஸ்புக்கோட தாக்கமும் படுவேகமா வளர்ந்துடுச்சு. இதையெல்லாம் அங்கங்க காமெடியா சேர்த்துக்கிட்டு அதுக்குள்ள ஆக்ஷன், காதல், குடும்பம்னு சுத்தி வர்ற கிராமத்து உலகம்தான் இந்த ‘பலே வெள்ளையத் தேவா’ என்கிறார் சசிகுமார்.
‘கிடாரி’யாய் மீசையை முறுக்கியவர், ‘பலே வெள்ளையத் தேவா’வில் கலகலப்பு மனிதராக மாறியிருக்கிறார். இயக்குநரும், நடிகருமான எம்.சசிகுமார், ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியிலிருந்து..
வரலாற்று பின்னணி கொண்ட வீரனின் பெயர்தான் வெள்ளையத் தேவன். ஆனால், உங்களின் ‘பலே வெள்ளையத் தேவா’ படத்தின் டிரெயிலரில் இருந்து பேனர், போஸ்டர் வரை எல்லாவற்றையும் பார்க்கும்போது காமெடிக் களம் மாதிரி தெரிகிறதே?
படத்துல வரலாற்று விஷய மெல்லாம் எதுவுமில்ல. அது ஒரு பெயர் அவ்வளவுதான். சிவாஜி சார், அவர் படத்துல ‘பலே வெள்ளையத் தேவா, வெற்றியோட திரும்பி வா’ ன்னு ஒரு இடத்துல பேசியிருப்பார். அந்த வசனம் மக்கள்கிட்ட பெரிய அளவுல போய் சேர்ந்திருக்கு. கிராமத்துல இன்னைக்கும் ஏதா வது ஒரு போட்டின்னு பசங்க இறங்கினா, ‘பலே, சூப்பர் கலக்கிட்டு வா’ன்னு பெரியவங்க சொல்றது வழக்கம்தானே. சமீபத்துல நம்ம வடிவேலு அண்ணன்கூட ஜாலியா ‘பலே வெள்ளையத் தேவா’ன்னு வசனம் பேசியிருக்கார். அந்த மாதிரி படத்துல நடிக்கிற கோவை சரளா அம்மா என்னை பார்த்து சொல்ற வார்த்தைதான் அது. ஜாலியா இருக்கேன்னு அதையே தலைப்பாக்கிட்டோம்.
‘கிடாரி’ படத்தை தொடர்ந்து இந்தப் படத்தோட இயக்குநர் சோலை பிரகாஷும் அறிமுக இயக்குநர். அறிமுக இயக்குநரையே ஏன் தொடர்ந்து தேர்வு செய்றீங்க?
நானும் அறிமுக இயக்குந ராத்தானே வந்திருக்கேன். என்னை விட அதிகமாக புதுமுகங்களை அறிமுகப்படுத்தினவங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க. அவங்க வரிசையில எனக்கும் இது நல்ல விஷயம்னு தோணுச்சு. தொடர்ந்து ஆக்ஷன் படங்களா பண்ணிக்கிட்டிருக்கும்போது முழுக்க காமெடியா பிரகாஷ் இந்த கதையை சொன்னார். ‘அட நல்லா இருக்கே. நம்ம ஆடியன்ஸுக்கும் இது பிடிக் குமே!’ன்னு தோணுச்சு. படத்தை 50 நாட்கள்ல எடுத்து முடிச்சாங்க. என் படங்கள்லயே குறைந்த நாட்கள்ல ஷூட் செய்யப்பட்ட படம் இதுதான். இதுக்கு இயக்குநர் சோலை பிரகாஷும், கேமராமேன் ரவீந்திரநாத் குருவும், தயாரிப்பு குழுவின் உழைப்பும்தான் முக்கிய காரணம்.
இந்தப் படத்துல கோவை சரளா எப்படி வந்தாங்க?
படத்தோட கதையை கேட்ட தும், அந்த கதாபாத்திரத்துக்கு தோணினவங்க ரெண்டே பேர் தான். ஒருத்தர் ஆச்சி மனோரமா. அவங்க இன்னைக்கு நம்ம கூட இல்லை. இப்போ நம்ம கூட இருக்குற இன்னொரு ஆச்சி கோவை சரளா அம்மா. அவங் களுக்கான படங்கள் இங்கே அதிகம் வர்றதில்லை. குறிப்பா, பெண் காமெடிப் படங்களே வர்றதில்லைன்னுதான் சொல்ல ணும். ‘பலே வெள்ளையத் தேவா’ படத்துல அவங்க இல் லைன்னா, படம் டேக் ஆப் ஆகியிருக்குமான்னு சொல்லத் தெரியலை. அப்படி ஒரு கதாபாத்திரம். படத்துல ‘செல்பி காத்தாயி’ பாட்டியா வர்றாங்க. அவங்க வர்ற காட்சிங்க அப்படி ஒரு எனர்ஜியா இருக்கும். அதேமாதிரி புதுமுக நாயகி தான்யாவோட கதாபாத்திரமும் முக்கியத்துவம் கொண்டதா இருக்கும்.
முன்னணி இயக்குநர்கள் சிலர் உங்களுக்கு கதை சொல்லத் தயாராக இருக்கிறார்கள் என்றும் அதை நீங்கள் தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறதே?
காமெடி பண்றீங்களா? யாருங்க சொன்னாங்க. அப்படி பார்த்தா பாலா அண்ணன் படத் துல நடிக்கத்தானே செஞ்சேன். முன்னணி இயக்குநர்களை நான் தவிர்ப்பதில்லை.அடுத்தடுத்து புதுமுக இயக்குநர்கள் எங்கிட்ட கதை எடுத்துட்டு வர்றாங்க. அது எனக்கு பிடிச்ச மாதிரியும் இருக்கு. அதனால அந்த பாதை யிலயே ஓடிக்கிட்டிருக்கேன். ‘இவ னும் ஒரு இயக்குநராச்சே. தலையீடல் அதிகமா இருக் குமோ!’ன்னு பெரிய இயக்கு நர்கள் யோசிக்கிறாங்களோ, என்னவோ?
வேல.ராமமூர்த்தி, வசுமித்ர, மு.ராம சாமின்னு எழுத்தாளர்களை நடிக்க வைப்பதில் ஆர்வம் செலுத்தும் நீங்கள், இங்கே உள்ள எழுத்தாளர்களின் கதைகளை திரைப்படமாக்கும் முயற்சியிலும் இறங்கலாமே?
அந்த எண்ணம் எனக்கும் உண்டு. அதுக்கு நானே அந்தப் படத்தை இயக்கணும். இங்கே உள்ள ஒரு எழுத்தாளரோட கதையை திரைக்கதை யாக எழுதி வைத்திருக்கிறேன். அதுவும் சீக்கிரமே நடக்கும்.
இயக்குநர் சசிகுமார்?
‘தாரை தப்பட்டை’ படத்துக்கு அப்பறம் உடனடியா புதுமுக இயக்குநர்கள்கிட்ட கதை கேட்டு ஒப்புக்கிட்டேன். அவங்களை காத்திருக்க வைக்கக்கூடாது. அதனால்தான் அடுத்தடுத்து நடிப்புல கவனம் செலுத்தறேன். இனி இயக்கத்துக்கான வேலை யும் தொடங்கும்.
நடிகர்கள் சிலர் உதவி செய்து விட்டு உடனுக்குடன் ட்விட்டர், முகநூலில் பதிவிட்டுக்கொண் டிருக்கும் சூழலில் படிப்புக்கு, விளையாட்டு விராங்கனை களுக்கு, விவசாயிகளுக்கு உதவு வது பற்றி நீங்கள் பதிவு செய்வதில்லையே?
நம்ம தம்பி, தங்கைங்கன்னு சொந்தங்களுக்கு உதவுறதை வெளியே சொல்றோமா?, இல்லையே. அந்தமாதிரிதான். ஆரம்பத்துல இருந்தே அது எனக்குத் தேவையில்லைன்னு தோணுச்சு. நாம செய்றதை பார்த்துட்டு, ‘அட அவர் செய்றாரே. நானும் செய்றேன்னு 4 பேர் உதவ வர்றாங்கன்னா சொல்லுங்க, அப்போ பார்க்கலாம்.