

திருட்டு விசிடி விவகாரம் தொடர்பாக, தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுராஜ் இயக்கத்தில் விஷால், வடிவேலு, சூரி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கத்தி சண்டை'. டிசம்பர் 23-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.
திருட்டு விசிடி-க்கு எதிராக குரல் கொடுத்து வரும் விஷால், இம்முறை தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி நான் நடித்த ’கத்தி சண்டை’ திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் நான் உங்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். திரைப்பட உலகில் அனைத்துதர மக்களின் உழைப்புடன் ஒரு திரைப்படம் வெளிவருகிறது.
அத்திரைப்படம் ஒரு சில விஷமிகளின் இழிச்செயலால் திருட்டு VCD யாக வெளிவருகிறது. அவ்வாறு வெளிவரும் VCD-க்களை உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய ஊழியர்கள் பயணம் செய்யும் பேருந்தில் திரையிடுகின்றனர், அவர்களுடைய இச்செயலால் திரைப்பட உலகில் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.
திருட்டு VCDக்கு எதிராக நான் பல முறை குரல்கொடுத்து இருப்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். இம் முறை நான் உங்களுடன் கைகோர்த்து குரல்கொடுக்க விரும்புகிறேன். ஆதலால் நீங்கள் உங்களுடைய வாகனத்தில் புதிய படங்களை திரையிடாமல் இருக்க உங்களுடைய ஊழியர்களுக்கு உத்தரவிட வேண்டிக்கொள்கிறேன்.
இதன் மூலம் திரையுலகை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளிபெருக வழி வகுக்கும். எங்களில் நீங்களும் ஒருவராக இருந்து செயல்பட உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
'கத்தி சண்டை' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'துப்பறிவாளன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால்.