

1996ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தோல்விடைய முக்கிய காரணமாக நான் இருந்தேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக நடிகர் சங்கம் சார்பில் நடந்த இரங்கல் கூட்டத்தில் ரஜினி உருக்கமாக பேசினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் பத்திரிகையாளர் சோ இருவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினி, சிவகுமார், வடிவேலு, லதா, வாணிஸ்ரீ உள்ளிட்ட முக்கிய நடிகர்களோடு நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் நடிகர் ரஜினி பேசியது, "1996ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சித்து எழுதி அவருடைய மனதை துன்பப்படுத்தி, அந்த தேர்தலில் அவர் தோல்விடைய முக்கிய காரணமாக நான் இருந்தேன். அவருடைய மனதை நான் மிகவும் பாதித்திருந்தேன்.
அதெல்லாம் கடந்த பிறகு, என்னுடைய மகள் ஐஸ்வர்யா திருமணம் போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்திருந்தேன். எனது பக்கத்து வீடே முதல்வர் ஜெயலலிதாவின் வீடு. அவருக்கு பத்திரிகைக் கொடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்காது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு பத்திரிகைக் கொடுப்பது என்ற தர்மசங்கடமான சூழல் எனக்கு ஏற்பட்டது. முதலில் அவரை சந்திக்க நேரம் கேட்கலாம் என கேட்டேன், உடனே கொடுத்தார்கள். வரமாட்டார்கள் என நினைத்து, சம்பிராயத்துக்குக் கொடுத்தேன். பத்திரிகையைப் பார்த்துவிட்டு, கழகத்தின் இன்னொரு தொண்டர் திருமணம் இருக்கிறது. அதனை தள்ளி வைக்கச் சொல்லிவிட்டு, கண்டிப்பாக வருகிறேன் என்றார். சொன்னபடி திருமணத்துக்கு வந்து அவருடைய முன்னிலையில் திருமணமும் நடைபெற்றது. அந்த மாதிரி பொன்மனசு கொண்டவர் ஜெயலலிதா அவர்கள் எங்களுடன் இல்லை.
பல சிஷ்யர்கள் குருக்களையே மிஞ்சிவிடுவார்கள். அதில் ஜெயலலிதாவும் ஒருவர். அவருடைய குரு, அரசியல் ஆசான், வாழ்க்கையிலும் அவருடைய ஆசானாக இருந்த எம்.ஜி.ஆரையே அரசியலில் மிஞ்சிவிட்டார் என்றால் அது மிகையாகாது. அவர் ஒரு வைரம். பூமிக்கு அடியில் கார்பன் இருக்கும், அது வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் காலப்போக்கில் வைரமாக மாறும். அதை எடுத்து தேய்த்து, தேய்த்து பட்டை தீட்ட அது நமது கையில் வைரமாக வருகிறது. முதல்வர் ஜெயலலிதா கூட ஒரு வைரம் தான். இந்த ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமுதாயத்தில் அழுத்தப்பட்டு, விமர்சனங்களால் இந்த வாழ்க்கையில் அவர்பட்ட துன்பங்களால் தேய்ந்து தேய்ந்து வைரமாக நம்மைவிட்டு போயிருக்கிறார்.
அவர் மறைந்த பிறகு கோடான கோடி தொண்டர்கள், மக்கள் கண்ணீரால் அஞ்சலி செலுத்தி, கண்ணீரால் நனைத்து அந்த வைரம் கோஹினூர் வைரமாக தற்போது எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகே உறங்கிக் கொண்டிருக்கிறது. 7 நாட்களில் லட்சணக்கான மக்கள் வந்து பார்த்துவிட்டு போயிருக்கிறார்கள் என்றால் இது சாதாரண ஒருவரின் சாதனையல்ல. இது இறைவனுடைய ஆசிர்வாதம்.
2 வயதில் அப்பாவை இழந்து, 22 வயதில் அம்மாவை இழந்தார். அளவில்லா அழகு, அறிவு, பெயர், புகழ் எல்லா செளகரியங்களும் இருந்தும், கல்யாணம் பாக்கியம் கிடைக்காமல் உற்றார் உறவினர்கள் எல்லாம் இல்லாமல் தன்னந்தனியாக வாழ்ந்தார். அவரே சொன்ன மாதிரி அந்த கட்சி அவ்வளவு சாதாரணமாக அவருடைய கையில் வரவில்லை. அதற்காக எவ்வளவு பாடுபட்டு, அவ்வளவு பெரிய கட்சியை காப்பாற்றி, கட்டிக்காத்து எங்கேயோ கொண்டுபோய், எத்தனையோ உதவிகளை செய்து புரட்சித்தலைவியாக இருந்தவர் அம்மா என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
கடைசி வரைக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது கூட இந்த தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து என்னவெல்லாம் விமர்சித்தாலும், அதெல்லாம் மீறி தேர்தலில் ஜெயித்து அதிமுகவை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு மருத்துவமனைக்கு செல்லும் இறுதி நிமிடம் வரைக்கும் வேலை செய்துவிட்டு, 10 மணிக்குப் போய் சேர்ந்தார்கள். கிட்டதட்ட 3 மாதம்.. குணமடைந்துவிட்டார் என நினைத்து, உறுதியாக கொடநாட்டில் போய் ஒய்வெடுப்பார் என்று நினைத்த நேரத்தில், ஆண்டவனுடைய நாட்டுக்கே போய் சேர்ந்துவிட்டார். அவருடைய ஆத்மா சாந்திடைய வேண்டும்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. துணிச்சல், எதிர்நீச்சல், சோதனைகளை சாதனைகளாக ஆக்குவது, எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் சாதித்து நிற்பது, அவரை மாதிரி சோதனைகளை சாதனைகள் ஆக்கியது யாருமே கிடையாது. அதெல்லாம் நமக்கு ஒரு பெரிய பாடம். அவர் நமக்கு ஒரு உதாரணம். பெண்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே ஒரு உதாரணம். நமக்கும் எவ்வளவோ சோதனைகள் வருகிறது, அவரை மனதில் வைத்துக் கொண்டு, அவரைப் போலவே நாமும் நடந்தால் குடும்பத்திலே, உறவினர்கள் மத்தியிலே, சமுதாயத்திலே நாமும் சந்தோஷமாக நிம்மதியாக வாழலாம். பெரிய ஆத்மா, இப்பொது மகாத்மா ஆகிவிட்டது. அவருக்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலி.
என்னுடைய மிக நெருங்கிய நண்பர் சோ அவர்கள். அவரைப் போல ஒரு மனிதரைப் பார்க்கவே முடியாது. மறைந்த ஜெயலலிதாவுக்கு நண்பர்கள் கிடையாது. அவருக்கு ரொம்ப நெருங்கிய நண்பர் என்றால் சோ அவர்கள் மட்டும் தான். ஜெயலலிதா இறந்து 16 மணி நேரத்தில் அவரும் இறந்து போயிருப்பதை நினைத்தால், ஏதோ ஒரு உறவு இரண்டு பேருக்குள்ளும் இருக்கிறது என நன்றாக தெரிகிறது. சோ என்ன நினைக்கிறாரோ, அதை தான் சொல்வார். என்ன சொல்கிறாரோ, அப்படி தான் நடந்து கொள்வார். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும்" என்று பேசினார் ரஜினிகாந்த்.