

பெரும் வரவேற்பைப் பெற்ற 'வெண்ணிலா கபடி குழு' 2ம் பாகத்தில் படப்பிடிப்பு துவங்கப்பட்டு இருக்கிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வெண்ணிலா கபடி குழு'. 7 வருடங்களுக்கு முன்பு வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஷ்ணு விஷால், சூரி ஆகியோரின் அறிமுகம படமாக இது அமைந்தது.
தற்போது இதன் 2-ம் பாகம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் மூலக்கதையை இயக்குநர் சுசீந்திரன் எழுதியிருக்கிறார். சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிக்கவிருக்கும் இப்படத்தில் விக்ராந்த் நாயகனாக நடித்து வருகிறார். புதுமுகம் அர்த்தனா நாயகியாகவும், பசுபதி , கிஷோர் , சூரி , ரவி மரியா , யோகி பாபு , அப்பு குட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் செல்வ சேகரன். செல்வ கணேஷ் இசையமைக்கும் இப்படத்துக்கு கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.