

எஸ்.பி.பி தனது சாதனையை இந்த உலகுக்கு நிரூபித்துள்ளார் என பாடகர் யேசுதாஸ் புகழாரம் சூட்டினார்.
திரையுலகில் பாடகராக 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, பத்திரிகையாளர்களை சந்தித்தார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அப்போது, வெளிநாட்டில் 'எஸ்.பி.பி 50' என்ற பெயரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியைப் பற்றி வீடியோ பதிவு ஒன்றைத் திரையிட்டார்கள்.
இச்சந்திப்பில் பாடகர் யேசுதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அங்கு எஸ்.பி.பி குடும்பத்தினர், யேசுதாஸ் மற்றும் அவருடைய மனைவிக்கு பாதபூஜை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய பாடகர் யேசுதாஸ் "எஸ்.பி.பி என்னுடைய தம்பி மட்டுமல்ல. நாங்கள் இருவரும் ஒருவரே. இசையால் ஒன்றிணைந்திருக்கிறோம். சரஸ்வதி தாயால் ஆசிர்வதிக்கப்பட்டவர் எஸ்.பி.பி. அவர் எப்போதுமே இசையில் தனக்கு எதுவும் தெரியாது என சொல்கிறார். அவர் அவ்வாறு சொல்லத் தேவையில்லை.
ஜென்ம ஜென்மமாக பல்வேறு அனுபவங்கள் மூலமாக விஷயங்களை கற்றுக் கொண்டு இசையில் இந்நிலைக்கு உயர்ந்துள்ளார். தனது சாதனையை இந்த உலகுக்கு நிரூபித்துள்ளார். ஆகையால் அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லக் கூடாது. அனைவருக்குமே அவர் எவ்வளவு பெரிய பாடகர் என்பது தெரியும்.
(யேசுதாஸ் பேசும் போது பல இடங்களில் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்தார் எஸ்.பி.பி.)
இங்கு எனது பாலுவுக்காக மட்டுமே கலந்து கொண்டுள்ளேன். எனது மன ஆழத்தில் இருந்து பாலுவின் குடும்பத்தை ஆசிர்வதிக்கிறேன். அவர் இன்னும் பல்லாண்டு காலங்கள் இசைக்காக வாழ வேண்டும். எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அன்புக்கு ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் நினைவுகூர விரும்புகிறேன்.
பாரீஸில் ஒரு கச்சேரி முடிந்தவுடன், யாருமே இல்லை. தங்கியிருந்த ஹோட்டலில் சாப்பாடும் இல்லை. எனது வாழ்க்கையில் சாப்பாடு இன்றி 3 நாட்கள் வரை இருந்துள்ளேன். பாரீஸில் அன்றிரவு ஒரே ஒரு ஆப்பிளை சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டேன். அப்போது என் அறைக்கு வெளியே 'ரூம் சர்வீஸ்' என்று சத்தம் கேட்டது. அது பாலுவின் சத்தம்தான் என எனக்குத் தெரியும். நான் அறையைத் திறந்தவுடன் சாதம், ரசத்துடன் பாலு நின்று கொண்டிருந்தார். இன்னொரு கர்ப்பத்தில் பிறந்தால்தான் தம்பியாக முடியுமா என்ன?. அந்த அளவுக்கு நேர்மையானவர் என் பாலு. அந்த சாப்பாட்டை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு ருசி நிறைந்தது.
எனக்கு நிறைய தம்பிகள் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு ரொம்பப் பிடித்த தம்பி என் பாலு. இன்னும் மேலும் பல ஆண்டுகள் வலுவாகவும், சந்தோஷமாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்" என்று பேசினார் பாடகர் யேசுதாஸ்.
யேசுதாஸ் பேசி முடித்தவுடன் கிளம்பினார். அப்போது செருப்பை விட்டுவிட்டேன் என தான் இருந்த இருக்கையை நோக்கி நடந்தார். அதற்குள் எஸ்.பி.பி, யேசுதாஸின் செருப்பைத் தூக்கிக் கொண்டு, 'வாருங்கள்' எனச் சொல்ல, 'கூடாது' என செருப்பைக் கீழே போடச் சொல்லி மாட்டிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து எஸ்.பி.பி - யேசுதாஸ் இருவரும் கட்டிப்பிடித்து தங்களுடைய அன்பைப் பரிமாறிக் கொண்டார்கள்