

சசிகலாவை நடிகர் அஜித் சந்தித்து பேசியதாக சமூகவலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை நடிகர் அஜித் திங்கள்கிழமை சந்தித்து பேசியதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவின.
அதேவேளையில், நடிகை ஸ்ரீதேவி - சசிலகா சந்திப்பு நடைபெற்றது குறித்த புகைப்படங்கள் வெளியானதால், அஜித்தும் சந்தித்திருக்கக் கூடும் என்று விவாதிக்க தொடங்கினார்கள். இதனை பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டனர்.
சமூகவலைத்தளத்தில் வலம் வரும் அதிமுக நிர்வாகிகள் பலருமே சசிகலாவை அஜித் சந்தித்தது உண்மை என்று ட்வீட் செய்தனர்.
ஆனால், அஜித் தரப்பில் இருந்து அப்படியொரு சந்திப்பு நடைபெறவே இல்லை என்று மறுத்துள்ளனர்.
உண்மையில் சசிகலா - அஜித் சந்திப்பு நடைபெற்றதா என்று அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, "அதிமுக பொதுக்குழு விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம்.
சசிகலாவை பல்வேறு நபர்கள் சந்தித்து வருகிறார்கள். யாரெல்லாம் சந்தித்தார்களோ, அவர்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறோம்.
சசிகலாவை அஜித் சந்திக்கவில்லை. எங்கிருந்து இந்தச் செய்திகள் உருவாகி, வெளியானது என்பதை விசாரிக்க இருக்கிறோம்" என்றனர்.