

'2.0' படத்துக்காக ஒரு பாடலை உத்திர பிரதேசத்தில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதில் ரஜினி கலந்து கொள்ளவுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது.
சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் இப்படம் உருவாகி வருவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை படக்குழு எட்டியுள்ளது.
இப்படத்துக்காக ஒரு பாடலை படமாக உத்திர பிரதேசம் செல்லவுள்ளது படக்குழு. இதற்கான இடங்களை படக்குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து உத்திர பிரதேச திரைப்பட மேம்பாட்டுக் கழக்கத்தின் துணை இயக்குநர் கவுரவ் துவிவேதி, "பெருமைக்குரிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பட படப்பிடிப்பு லக்னோ நகரில் நடைபெறுவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். அவரது குழுவுக்கான முழு ஆதரவையும், தேவைப்படும் உபகரணங்களையும் வழங்குவோம்.
மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் திரைப்படங்கள் தொடர்பான தொலைநோக்குப்பார்வை தென்னிந்திய கலைஞர்களையும் ஈர்த்துள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேசத்தில் கோமதி நதியோரம் மற்றும் ஜனஷ்வெர் மிஸ்ரா பூங்கா ஆகியவற்றில் பாடலை படமாக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிப்ரவரி மாதம் நடைபெறும் இப்படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ளவுள்ளதால், அச்சமயத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.