

பல்கேரியாவில் நடைபெற்று வரும் அஜித் - சிவா இணையும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. தற்போது மீண்டும் பல்கேரியாவுக்கு சென்று சில முக்கியமான காட்சிகளை படமாக்கி வருகிறது படக்குழு.
காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரோடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் பைக் துரத்தல் காட்சிகளில் டூப்பின்றி சில காட்சிகளில் நடித்து படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் அஜித்.
இந்நிலையில் படப்பிடிப்பு எப்போது முடியும் என்று படக்குழுவில் பணியாற்றும் ஒருவரிடம் பேசிய போது, "புத்தாண்டுக்கு முன்பாக படக்குழு இந்தியா திரும்பிவிடும். வெளிநாட்டில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்துமே இப்படப்பிடிப்போடு முடிந்துவிட்டது. மேலும் 85% படப்பிடிப்பும் முடிந்துவிடும்.
அதனைத் தொடர்ந்து சில காட்சிகளை ஹைதராபாத்திலும், சென்னையிலும் மட்டும் படமாக்க இருக்கிறோம். படப்பிடிப்புக்கு இடையே எடிட்டிங் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 14ம் தேதி படம் கண்டிப்பாக வெளியாகும்" என்று தெரிவித்தார்கள்.