Last Updated : 09 Dec, 2022 05:06 PM

Published : 09 Dec 2022 05:06 PM
Last Updated : 09 Dec 2022 05:06 PM

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் Review: நாயகன் வடிவேலுவால் கூட படத்தைக் காப்பாற்ற முடியாதது சோகம்!

காமெடி கடத்தல் மன்னன் ஒருவன் அசல் ரவுடிகளை கதறவிட்டு, ஓடவிட்டால்... அதுதான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. பணக்கார வீட்டு நாய்களை குறிவைத்து கடத்தி அதன் உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் ‘காமெடி’ கடத்தல் மன்னன் நாய் சேகர் (வடிவேலு). இடையில் நிஜ ரவுடி ஒருவரின் நாயைக் கடத்தி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். பின்னர் ஊரைவிட்டு கிளம்பலாம் என நினைக்கும்போது, அவரது சொந்த நாயையே ஒருவர் கடத்தி வைத்து, அதன் யோகத்தால் கோடிகளில் புகழடைந்திருப்பதை அறிந்து, அதை மீட்க புறப்படுகிறார். இறுதியில் தனது நாயை நாய் சேகர் மீட்டாரா? இல்லையா? அதற்கிடையில் அவருக்கு வந்த பிரச்சினைகளை எப்படி சமாளித்தார்? - இதுதான் படத்தின் திரைக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் மீண்டும் வடிவேலு. பார்வையாளர்கள் பார்த்துப் பார்த்து ரசித்து குலுங்கி சிரித்த தனது தனித்துவ உடல் மொழியை வார்த்திருக்கிறார். அவருக்கான அறிமுகக் காட்சிகள் கூஸ்பம்ஸ்! கிட்டத்தட்ட ஒரு மாஸ் ஹீரோவுக்கு இணையான அந்த இன்ட்ரோ காட்சி ரசிக்க வைக்கிறது. அந்த தனக்கான பாடிலாங்குவேஜில் ஸ்டைலாக நடந்து வருவது, வசனமற்ற காட்சிகளிலும் தனது முகபாவனையால் சிரிக்க வைப்பது, இங்கிலீஷ் பேசும் அந்த ஸ்டைல், டம்மியான தன்னை மாஸாக காட்ட நினைத்து பல்பு வாங்குவது என ஈர்க்கிறார். ஆனாலும், இயல்பான அந்த வின்டேஜ் வடிவேலு ஏனோ மிஸ்ஸிங்!.

ஆனந்த்ராஜ் நகைச்சுவைக் காட்சிகளுக்கான பக்கா மெட்டீயரில். ரிட்டையர்டு ரவுடியை வைத்து, டம்மி கூட்டாளிகளுடன் அவர் நடத்தும் ‘கடத்தல்’ தர்பார் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் ராவ் ரமேஷின் நடிப்பு கவனம் பெறுகிறது. ரெடின் கிங்க்ஸ்லீ வழக்கமான தனது பாணியில் சில இடங்களில் புன்முறுவலையும், ஒரு சில காட்சிகளில் சத்தமாக சிரிக்கவும் வைக்கிறார். செட் ப்ராபர்டிகளாக வருகிறார் ஷிவாங்கி. பிரசாந்தை முதல் பாதியுடன் முடித்து அனுப்பும் இயக்குநர் அந்த இடத்தில் இரண்டாம் பாதிக்கு ஷிவானியை தேர்ந்தெடுத்துள்ளார். தவிர முனிஷ்காந்த், லொள்ளு சபா ஷேஷூ, கேபிஒய் ராமர், கேபிஓய் பாலா, லொள்ளு சபா மாறன், மனோபாலா தேவையான நடிப்பை பதிவு செய்கின்றனர்.

சுராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தின் முதல் பாதி திரைக்கதையில் நகைச்சுவை வறட்சி தலைவிரித்தாடுகிறது. காமெடியை எதிர்நோக்கி காத்திருக்கும் பார்வையாளர்களுக்கு ஆனந்த்ராஜ் திரையில் தோன்றுவது சற்று ஆறுதல். மற்றபடி, வடிவேலு நாய் கடத்துபவர் என காட்ட நினைத்து வைக்கப்பட்ட பெரும்பாலான காட்சிகள் உப்பு சப்பில்லாதவை. ஆனந்த்ராஜ் - வடிவேலு நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் சுவாரஸ்யம். நிறைய காமெடி நடிகர்கள் இருந்தும் அவர்களால் திரைக்கதைக்கு தேவையான நகைச்சுவை கொடுக்க முடியாததாலும், அழுத்தமில்லாத காட்சிகளாலும் வடிவேலுவால் கூட முதல் பாதியைக் காப்பாற்ற முடியவில்லை.

‘கொண்டைக்கு கோகனேட் ஆயில்’, ‘நீங்க டாக்டரா டையலாக் ரைட்டரா’, ‘பங்களாவா இங்க இருக்காரு பாரு சிங்கிளா’ என ரைமிங் டயலாக்குகள் சில இடங்களில் கைகொடுக்கின்றன. இரண்டாம் பாதியில் கண்தெரியாத மாற்றுத்திறனாளியாக ஸ்கோர் செய்கிறார் வடிவேலு. இடையில் வரும் பாஸ்வேர்டு காமெடியும், க்ளைமாக்ஸும் சிரிப்பலையை எழுப்புகின்றன. இதைத்தாண்டி படத்தில் பெரிய அளவில் சிரிக்கவோ, ரசிக்கவோ, அழுத்தமான திரைக்கதைக்கோ எந்த இடத்திலும் இடமளிக்காதது கைபேசியை கையிலெடுக்க தூண்டுகிறது.

‘அப்பத்தா’ பாடலுக்கான பின்னணி இசையை பெரும்பாலான இடங்களில் பிணைத்து, காமெடி காட்சிகளுக்கான இசையை தேவைக்கேற்ப கொடுத்திருக்கிறது சந்தோஷ் நாரயணனின் ஃபேன்பாய் மூவ்மென்ட். வடிவேலுவுக்கான ஆடைகள் தேர்வு கிட்டத்தட்ட ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ சந்தானத்தின் உடைத் தேர்வை நினைவுபடுத்தியது.

வடிவேலு தன்னால் முடிந்த நடிப்பையும், உழைப்பையும் செலுத்தியிருப்பது பளிச்சிடுகிறது. ஆனால், அவரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம் என தோன்றுகிறது. குறிப்பாக மொத்தப் படமும் முழுமையற்று ஒரு சில காமெடி காட்சிகளை மட்டும் பார்த்த உணர்வைத் தருகிறது. தவிர கதையாகவோ, திரைக்கதையாகவோ எந்த இடத்திலும் அழுத்தம் மேலோட்டமாக நகரந்தது பலவீனமான எழுத்தை உறுசெய்கின்றன.

மொத்தத்தில் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ பார்வையாளர்கள் மனதில் நீங்கா இடத்தில் நிலைகொள்ளும் என கருதினால், அது சில காமெடிக் காட்சிகளைத் தாண்டி பெரிய அளவில் ஆட்கொள்ளாமல் கடந்திருக்கிறது.

விமர்சனத்தை வீடியோ வடிவில் காண:

தவறவிடாதீர்!Sign up to receive our newsletter in your inbox every day!

 
x