

பொங்கல் வெளியீட்டில் 'பைரவா' உடன் 5 படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்திருக்கிறார்கள்.
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'பைரவா' பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. பொங்கல் வெளியீடு என்பதை நீண்ட நாட்களுக்கு முன்பாகவே படக்குழு தெரிவித்தது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23ம் தேதி இசை வெளியீடு நடைபெற உள்ளது.
'கத்தி சண்டை' பொங்கல் வெளியீடாக இருந்தது. டிசம்பர் 23ம் தேதி வெளியீட்டிலிருந்து 'சி 3' பின்வாங்கியதைத் தொடர்ந்து அந்த தேதியில் 'கத்தி சண்டை' வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது 5 படங்கள் பொங்கல் வெளியீட்டை உறுதி செய்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ப்ரூஸ் லீ', அருண் விஜய் நடித்துள்ள 'குற்றம் 23', ஜெய் நடித்துள்ள 'எனக்கு வாய்த்த அடிமைகள்', கலையரசன் நடித்துள்ள 'அதே கண்கள்' மற்றும் கிருஷ்ணா நடித்துள்ள 'யாக்கை' ஆகியவை பொங்கல் வெளியீடு என்று அறிவித்துள்ளார்கள்.
ஒரே தேதியில் 6 படங்கள் தங்களுடைய வெளியீட்டை அறிவித்திருப்பது விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
இது குறித்து முன்னணி விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளரிடம் பேசிய போது, "தமிழகத்தில் மொத்த 950 திரையரங்குகள் இருக்கிறது. இவற்றில் விஜய் நடித்துள்ள 'பைரவா' படத்துக்கு குறைந்தது 450 திரையரங்குகள் கிடைக்கும். மீதமுள்ள 500 திரையரங்குகளில் 5 படங்களை வெளியீட்டு எப்படி லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை தயாரிப்பாளர்கள் சிந்திக்க வேண்டும்.
'பைரவா' உடன் சுமார் 2 சிறு முதலீட்டு படங்கள் வெளியாகலாம். ஆனால் 5 படங்கள் என்பது சாத்தியமிலலத ஒன்று. போட்டிக்கு என அறிவித்துவிட்டு, இறுதியில் எப்படியும் 3 படங்கள் பின்வாங்கிவிடும். அதிலும் யார் பின்வாங்குவது என்பதிலும் போட்டி இருக்கும். முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தை முதலில் மனதில் வைத்து வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் முடிவு செய்தால் நல்லது. இப்படி போட்டிக்கு என வெளியிட்டால் நஷ்டம் தான் ஏற்படும்" என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.