விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் வில்லனே கிடையாதா?
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தில் வில்லனே கிடையாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், அந்தத் தகவலில் உண்மை இல்லை.
நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். படத்திற்கான வசனத்தை விவேக் எழுதியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிடுகிறது.
இந்தப் படத்தில் ராஷ்மிகா, ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், ‘வாரிசு’ படத்தி யார் வில்லன் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், குஷ்பு அளித்த பேட்டியின் சிறு பகுதி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், “இந்தப் படத்தில் வில்லனே கிடையாது. வாழ்க்கையின் சூழல்தான் வில்லன். இப்படத்தை பார்ப்பவர்களுக்கு அதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் நிச்சயம் ஒன்றிப்போகச் செய்யும். என் அண்ணன் இவ்வாறுதான் பேசுவார், என் அப்பா இப்படித்தான் பேசுவார் என்று பார்வையாளர்கள் நினைப்பார்கள். இது ஒரு ஃபீல் குட் மூவி” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், குஷ்பு கூறியது சமீபத்தில் வெளியான ‘காஃபி வித் காதல்’ படம் குறித்து. அந்தப் பகுதியை மட்டும் கட் செய்து, வாரிசு படம் பற்றிதான் அவர் பேசியதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. எனவே, வாரிசு படத்தின் வில்லன் கதாபாத்திரம் யார் என்ற கேள்வி மட்டும் அப்படியே நீடிக்கிறது.
‘வாரிசு’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
